எண்ணெய் பாக்கெட் வாங்கும்போது ஏமாறாமல் இருப்பது எப்படி? - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, April 14, 2020

எண்ணெய் பாக்கெட் வாங்கும்போது ஏமாறாமல் இருப்பது எப்படி?

எண்ணெய் பாக்கெட் வாங்கும்போது ஏமாறாமல் இருப்பது எப்படி?


சமையல் எண்ணெய் பாக்கெட், பாட்டில் வாங்கும்போது நுகர்வோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இந்திய நுகர்வோர் சங்கத் தலைவர் நிர்மலா தேசிகன் கூறியுள்ளார்.


தமிழகத்தில் உள்ள சில பிரபல எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள் பாமாயில், பருத்தி விதை எண்ணெய், தவிட்டு எண்ணெய் போன்றவற்றை ரீபைண்டு செய்து கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் என்ற பெயரில் கலப்படம் செய்து விற்பதாக இந்திய நுகர்வோர் சங்கம் (கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா) சமீபத்தில் தெரிவித்தது.



இந்த அமைப்பின் தலைவர் நிர்மலா தேசிகன், நுகர்வோர் விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியம் குறித்து ‘தி இந்து’விடம் பகிர்ந்துகொண்டார். அவர் கூறியதாவது:


ஒரு பொருளை வாங்கும்போது, பாக்கெட் மீது அச்சிடப்பட்டுள்ள விவரங்களை நன்கு படித்துப் பார்க்க வேண்டும். விலை, காலாவதியாகும் நாள், அக்மார்க் முத்திரை, உணவுப் பாதுகாப்புத் துறையின் முத்திரையுடன் கூடிய லைசென்ஸ் எண், எடையளவு, எண்ணெய்யில் உள்ள சத்துக்கள் பற்றிய தகவல்கள், ‘ஆர்ஜிமோன் எண்ணெய் கலப்படமில்லாதது’ என்றெல்லாம் அச்சிடப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும்.



பாக்கெட் உணவுப் பொருட்களைக் கண்காணிப்பதும், தவறு செய்யும் வணிகர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதும் தொழிலாளர் துறையின் கீழ் செயல்படும் எடையளவுச் சட்டப் பிரிவு, அக்மார்க் தர முத்திரை பிரிவு, உணவுப் பாதுகாப்புத் துறை ஆகிய 3 துறையினரின் கடமை. 


இத்துறைகளில் போதிய பணியாளர்கள் இல்லாததால் கடைகளுக்கு நேரில் சென்று மாதிரிகளை சோதனை செய்வது, தவறு செய்யும் வணிகர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போன்ற பணிகளை அவர்கள் முழுவீச்சில் மேற்கொள்வது இல்லை. இதை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் சில வணிகர்கள், விதிமுறைகளை மீறி தங்கள் இஷ்டத்துக்கு உணவுப் பொருட்களை பாக்கெட் செய்து விற்கின்றனர்.



எடையளவுச் சட்டப்படி ஒரு லிட்டர், 500 மி.லி., 250 மி.லி. அளவுகளில் மட்டுமே எண்ணெய் விற்கவேண்டும். ஆனால் 850 மி.லி., 300 மி.லி. என்றெல்லாம் விற்கின்றனர் கொலஸ்ட் ரால் ஃப்ரீ, கொலஸ்ட்ரால் ஃபைட்டர் என விளம்பரம் செய்வதும், ரீபைண்டு ஆயில் என்பதோடு சூப்பர், அல்ட்ரா, மைக்ரோ என்கிற வார்த்தைகளை சேர்த்து விளம்பரம் செய்வதும் தவறு.

‘பிளெண்டட் எடிபிள் வெஜிடபிள் ஆயில்’ என்ற பெயரில் சமையல் எண்ணெய்களில் 20 சதவீதம் வரை பிற உணவு எண்ணெய்களை கலந்து விற்க அரசு அனுமதித்துள்ளது. என் னென்ன விகிதத்தில் என்னென்ன உணவு எண்ணெய்கள் சேர்க்கப் பட்டுள்ளன என்ற விவரத்தை பாக்கெட்டில் கட்டாயம் அச்சிட வேண்டும். மேலும், குறிப்பிட்ட ஒரு எண்ணெய் வித்தின் படத்தை மட்டுமே போட்டு விற்கக்கூடாது.


10 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்ஜிமோன் ஆயில் பயன்படுத்திய சிலர் ஆக்ராவில் இறந்தனர். அதன் பிறகு, உணவு எண்ணெய்யாக ஆர்ஜிமோன் ஆயிலை பயன்படுத்த அரசு தடை விதித்தது. ‘ஆர்ஜிமோன் ஆயில் இல்லை’ என எண்ணெய் பாக்கெட்களில் அச்சிடுவதும் கட்டாய மாக்கப்பட்டது. அவ்வாறு அச்சிடப் படாமல் தற்போதும் சில சமையல் எண்ணெய் பாக்கெட்கள் விற்கப்படுகின் றன. இதையும் நுகர்வோர்கள் கவனித்து வாங்க வேண்டும்.

ஆய்வில் நாங்கள் கண்டறிந்த மோசடி விவரங்களை எடையளவு துறை, அக்மார்க் பிரிவு, உணவுப் பாதுகாப்புத் துறையினருக்கு புகாராக அனுப்பியுள்ளோம். நுகர்வோர் நலன் கருதி இந்த பிரிவுகளில் கூடுதல் பணியாளர்களை அரசு நியமிக்க வேண்டும். இவ்வாறு நிர்மலா தேசிகன் கூறினார்.


கலப்பட எண்ணெய் பற்றி சந்தேகமா?

கலப்பட எண்ணெய் தொடர்பான கூடுதல் விவரங்கள், சந்தேகங்களுக்கு ‘கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பை 044-24494573, 24494577 ஆகிய தொலைபேசி எண்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரை தொடர்பு கொள்ளலாம். caiindia1@gmail.com என்கிற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

Post Top Ad