கரோனா காலத்தைக் கடக்க உதவும் அலைவரிசைகள்
இசையைக் கேட்பதற்கும், திரைப்படங்கள், கார்ட்டூன், நாடகங்கள் பார்ப்பதற்கும், சுவாரசியமான காணொலிகளைப் பார்ப்பதற்குமான களமாகவே யூடியூப்பை பல மாணவர்கள் பயன்படுத்திவருகிறார்கள். ஆனால், சரியான வீடியோ அலைவரிசைகளை அடையாளம் கண்டுபிடித்துப் பின்பற்றத் தொடங்கினால், கல்வி பயில்வதற்கும், படைப்பாற்றலில் சிறந்து விளங்குவதற்கும் யூடியூப்பைவிடச் சிறந்த களம் வேறில்லை.
யூடியூப்பில் எல்லாப் பாடங்களையும் எளிமையாகக் கற்றுக்கொடுக்க நூற்றுக்கணக்கான அலைவரிசைகள் இருக்கின்றன. கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்காகவீட்டில் இருக்கும் இந்த நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தினால், யூடியூப்பில் இருக்கும் சில அட்டகாசமான அலைவரிசைகளைப் பின்பற்றிப் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். மீண்டும் பள்ளி, கல்லூரி திறந்து புதிய கல்வியாண்டில் அடியெடுத்துவைக்கும்போது, நம்பிக்கையுடன் மேற்கொண்டு படிப்பதற்கு இந்த யூடியூப் அலைவரிசைகள் உதவும். பல மணி நேரக் காணொலிகள் பதிவேற்றப்பட்டிருக்கும் சிறந்த யூடியூப் அலைவரிசைகள் இந்த விடுமுறையை அர்த்தமுள்ளதாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்றும்.
அப்படிப்பட்ட சில அலைவரிசைகள்:
‘ஈஸி லாங்குவேஜஸ்’( Easy Languages) என்ற இந்த யூடியூப் அலைவரிசை 2006-லிருந்து இயங்கிவருகிறது. தன்னார்வமாக நிர்வகிக்கப்படும் இந்த அலைவரிசையில் உங்களுக்குப் பிடித்த உலக மொழிகளைக் கற்றுக்கொள்ளலாம்.ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்ய, கொரிய, போலிஷ், கிரேக்க, மண்டாரின், டேனிஷ், ஜெர்மன், துருக்கி, இத்தாலிய, போர்த்துகீசிய, ஸ்பானிய மொழிகளை இந்த அலைவரிசை கற்றுக்கொடுக்கிறது. எளிமையான தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து ஒரு நிமிடத்திலிருந்து பத்து நிமிடக் குறுங்காணொலிகளில் இந்த அலைவரிசை பல உலக மொழிகளை மாணவர்கள் கற்றுக்கொள்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது.பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் எப்போதும் செயல்திறனுடன் இயங்குவதற்கான வழிகளைக் கற்றுகொடுக்கிறது ‘தாமஸ் ஃபிராங்க்’ (Thomas Frank) என்ற இந்த யூடியூப் அலைவரிசை.
2006-ம் ஆண்டிலிருந்து இயங்கிவரும் இந்த அலைவரிசை மாணவர்களிடையே வெகுபிரபலம்.தேர்வுக்கு எளிமையாகத் தயார்செய்ய உதவும் செயலிகள், வகுப்புகளில் தெளிவாகக் குறிப்பெடுக்க உதவும் செயலிகள், படிப்பதையோ பணியையோ தள்ளிப்போடுவதைத் தடுப்பது எப்படி? தேர்வில் கட்டுரை வினாக்களுக்குப் பதிலளிப்பது எப்படி? டாவின்சியைப் போல யோசிப்பது எப்படி எனப் பல சுவாரசியமான தலைப்புகளை இந்த அலைவரிசை அலசுகிறது. தனிநபர் செயல்திறனை (Productivity) அதிகரித்துகொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்த அலைவரிசை உதவும்.
கதைசொல்ல வேண்டும், திரைக்கதை எழுத வேண்டும் என்று விரும்பும் மாணவர்களுக்கு ‘லெசன்ஸ் ஃபிப்ரம் தி ஸ்கிரீன்ப்ளே’ (Lessons from the Screenplay) என்ற இந்த யூடியூப் அலைவரிசை ஒரு சிறந்த வழிகாட்டி. 2016-லிருந்து இயங்கிவரும் இந்த அலைவரிசை, பிரபல ஹாலிவுட் திரைப்படங்கள், நாடகங்களின் திரைக்கதைகளை மாணவர்களுக்கு புரியும்வகையில் எளிமையாக அலசுகிறது. ஒரு திரைப்படத்தில் சிறந்த முறையில் கதை சொல்லப்படுவதற்கு உதவும் அம்சங்களாக எவை இருக்கின்றன என்பது விளக்கப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் டக்கர் என்பவர் இந்த அலைவரிசையை நிர்வகித்துவருகிறார். திரைக்கதை எழுதுதல், வீடியோ கேம்ஸ் உருவாக்கம் போன்றவற்றில் ஆர்வமிருக்கும் மாணவர்களுக்கு இந்த அலைவரிசை உதவும்.
உலக வரலாறு, பொருளாதாரம், உயிரியல், சமூகவியல், திரைப்படவரலாறு, இலக்கியம், இயற்பியல், வேதியியல், உளவியல் உள்ளிட்ட பாடங்களை எளிமைப்படுத்தும்விதமாகச் செயல்பட்டுவருகிறது ‘கிராஷ் கோர்ஸ்’ (Crash Course) அலைவரிசை. உலக வரலாறு மட்டுமல்லாமல் நாடகம், திரைப்பட வரலாற்றையும் இந்த அலைவரிசை சுவாரசியமான வகையில் விளக்குகிறது. ஒவ்வொரு தலைப்பையும் ஒரு பாடமாகப் பாவித்து விளக்குவது இந்த அலைவரிசையின் சிறப்பம்சம்.உதாரணத்துக்கு ‘நாடகம் என்பதை விளக்கும் முதல் காணொலியைத் தொடர்ந்து அடுத்த காணொலி பழங்கால கிரேக்க, ஏதென்ஸ் நாடக வரலாறை விளக்குகிறது.
இப்படி உலக நாடக வரலாற்றை மட்டும் விளக்குவதற்கு 10 மணி நேரத்துக்கு 51 காணொலிகள் உள்ளன. துறைசார் நிபுணர்கள் விளக்கமளிக்கும் இந்தக் காணொலிகள் கல்லூரி விரிவுரைகளுக்கு நிகராக இருக்கின்றன. ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்து, அதில் வழங்கப்பட்டிருக்கும் ‘கிராஷ் கோர்ஸை’ முழுமையாகப் பார்த்துமுடிக்கும்போது, அந்தத் தலைப்பில் நாம் கரைகண்டுவிட்டதை உணர முடியும் அளவுக்குஇந்தக் காணொலிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.