கொரோனா நிவாரண நிதிக்கு மத்திய அரசு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் பிடித்தம்-சங்கங்கள் கடும் எதிர்ப்பு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, April 19, 2020

கொரோனா நிவாரண நிதிக்கு மத்திய அரசு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் பிடித்தம்-சங்கங்கள் கடும் எதிர்ப்பு

கொரோனா நிவாரண நிதிக்கு மத்திய அரசு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் பிடித்தம்-சங்கங்கள் கடும் எதிர்ப்பு
ஓராண்டுக்கு நீட்டிக்க திட்டம் ஊழியர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு

சென்னை: கொரோனா நிவாரண நிதிக்கு மத்திய அரசு ஊழியர்களின் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது ஓராண்டுக்கு பிடித்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஊழியர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கொரோனா நிவாரண நிதிக்காக எம்பி, எம்எல்ஏக்கள் நிதி, சம்பளம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அரசு ஊழியர்களும் தானாக முன்வந்து தங்களது ஒரு நாள் சம்பளத்தை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களின் ஒவ்வொரு மாதம் வழங்கும் சம்பளத்தில் ஒரு நாள் ஊதியம் பிடிக்கப்படும்.

அவ்வாறு ஓராண்டுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு ஊழியர்கள் மகாசம்மேளனம் பொது செயலாளர் எம்.துரைப்பாண்டியன் கூறியதாவது: எப்போது எல்லாம் தேசிய பேரிடர் வந்திருக்கிறதோ அப்போது எல்லாம் மத்திய அரசு ஊழியர்கள் தாங்களாகவே முன்வந்து எழுத்துப்பூர்வமாக அரசாங்கத்துக்கு ஒரு நாள் சம்பளத்தை கொடுத்து இருக்கிறோம். சில பேர் 15 நாட்கள், ஒரு மாதம் சம்பளத்தை கூட கொடுத்து இருக்கிறார்கள். இப்போது கொரோனாவால் ஏற்பட்டுள்ள தேசிய பேரிடருக்கும் நாங்கள் ஏற்கனவே ஊழியர் தரப்பில் பேசி ஒரு நாள் சம்பளத்தை கொடுக்கிறோம் என்று சொல்லி ஏப்ரல் மாதம் சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்து இருக்கிறோம்.

ஆனால், நேற்று (17ம் தேதி) நிதி அமைச்சகத்திடம் இருந்து ஒரு கடிதம், அதில் எல்லா ஊழியர்களுக்கும் பொருந்துமா என்று தெரியவில்லை. வருவாய்துறையில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் என்று போடப்பட்டுள்ளது. 17ம் தேதி சுற்றிக்கை போட்டு 20ம் தேதிக்குள் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நாள் சம்பளத்தை பிடிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அது ஏற்புடையது அல்ல. விரும்புகிறவர்கள் கொடுப்பது என்பது வேறு விஷயம். 17ம் தேதி ஒரு அரசாணையே போட்டு, 18ம் தேதி, 19ம் தேதி விடுமுறை நாள். 20ம் தேதி வந்து உங்கள் கருத்தை சொல்லுங்கள் என்று சொல்வது ஏதேச்சியதிகாரமான போக்கு. ஊழியர்கள் தரப்பில் முதலில் பேசியிருக்க வேண்டும்.

நாம் என்ன தோற்றத்தை உருவாக்குகிறோம் என்றால், ஏதோ இந்திய அரசாங்கத்திடம் கொரோனோ நோயை விரட்டுவதற்கு, மருத்துவம் பார்ப்பதற்கு பணம் இல்லை என்ற ஒரு தப்பான தோற்றத்தை உருவாக்குகிறோம். இந்திய அரசாங்கத்திடம் நிறைய பணம் இருக்கிறது. அன்னிய செலவாணி கையிருப்பு இருக்கிறது. ரிசர்வ் வங்கியில் ஐந்தரை லட்சத்தில் இருந்து, ஆறரை லட்சம் கோடி வரைக்கும் பணம் இருக்கிறது. இந்திய பட்ஜெட்டில் போடப்பட்டுள்ள மூலதன செலவை குறைக்கலாம். இவர்கள் 3 ஆயிரம் கோடிக்கு சிலை வைத்தார்கள். 20 ஆயிரம் கோடிக்கு நாடாளுமன்றத்தை எதற்கு கட்ட வேண்டும்.

ஏற்கனவே இருக்கிற நாடாளுமன்றத்துக்கு பேய் பிடித்து விட்டதா?. இந்திய நாட்டில் உள்ள பணக்காரங்களுக்கு எல்லாம், நிர்மலா சீதாராமன் நிதியமைச்சர் வந்ததற்கு அப்புறம் வரி விலக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி கொடுத்து இருக்காங்க. மோடி அரசின் முதல் 5 ஆண்டில் 4.20 லட்சம் கோடி கொடுத்து இருக்கிறார்கள். இந்திய நாட்டின் கிடங்குகளில் கிட்டத்தட்ட ஏழரை கோடி டன் அரிசியும், கோதுமையும் இருக்கிறது. இதனை நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கலாம்.

33 கோடி பேருக்கு ஜன்தன் வங்கி கணக்கு உள்ளது. அதில் எல்லாத்துக்கும் பணம் போட முடியும். விவசாயிகளுக்கு வரியை தள்ளுபடி பண்ணு, கடனை தள்ளுப்படி பண்ணு
என்றால் பண்ண மாட்டேன்கிறார்கள். ஏழைகளுக்கு பணம் கொடு என்றால் அவர்களுக்கு செலவு செய்ய மனம் இல்லை.இவ்வாறு கூறியுள்ளார்.

Post Top Ad