'கொரோனா' என்ற மகாபாரத போர்! திருப்பூர் மாணவி அசத்தல் ஓவியம்
திருப்பூர்: 'கொரோனா' ஒழிப்பை, மகாபாரத யுத்தமாக சித்தரித்து, திருப்பூர் கல்லுாரி மாணவி ஒருவர், அழகிய கருத்தோவியம் தீட்டியுள்ளார்.
திருப்பூரை சேர்ந்த கனகதுர்கா, 'நிப்ட்--டீ' கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு அப்பேரல் பேஷன் டிசைன் படித்து வருகிறார். இவர், கொரோனாவுக்கு எதிராக தங்கள் உயிரை பணயம் வைத்து, போராடி வருவோரை கவுரவப்படுத்த, மகாபாரத போரை சித்தரித்து ஓவியம் வரைந்துள்ளார்.
ரதத்தின் உச்சியில், மூவர்ணத்தில், தேசிய கொடிபோன்ற கூரை, நான்கு துாண்களுடன், குதிரைகள் பூட்டப்பட்ட தேர் என்ற அமைப்பிலும், தேசத்தை சூறையாடிச் செல்ல கொரோனாக்கள் முற்படுகின்றன, மருத்துவர், செவிலியர் சாரதியாக இருந்து, பாரதம் என்கிற தேரை ஓட்டுகின்றனர்.
மத்திய, மாநில அரசுகள், மருத்துவ கவுன்சில் என்கிற குதிரைகள், தேரை இழுத்து செல்கின்றன. குதிரைகளின் வலிமைமிக்க குளம்படி பட்டு, கொரோனா வைரஸ் மாண்டுபோவது போன்ற காட்சியை தீட்டியுள்ளார்.
ஓவியம் குறித்து, மாணவி கனகதுர்கா கூறுகையில், ''வைரஸ் தடுப்பில், முக கவசம் மிக அவசியம். அதனாலேயே, குதிரைகளும் முக கவசம் அணிவித்துள்ளேன். ஊரடங்கு, வைரஸ் தொற்று அபாயத்தால், மக்கள் அனைவரும் வீட்டுக்குள் பாதுகாப்பாக உள்ளனர் என்கிற ஒரு மறைமுக கருத்தும், ஓவியத்தில் பொதிந்துள்ளது. இதை அடிப்படையாக கொண்டு, டீ சர்ட்டில் பொறிப்பதற்கான டிசைனையும் உருவாக்க திட்டமிட்டுள்ளேன்,'' என்றார்.