இந்தியாவில் எவ்வளவு வேகத்தில் கரோனா பரவுகிறது?
இந்தியாவில் தற்போது பரவும் வேகத்தில் கரோனா நோய்த்தொற்று பரவினால் இன்னும் ஒரு வாரத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் ஆகும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கரோனா நோய்த்தொற்று பரவலை உலகம் முழுக்க தீவிரமாக கண்காணித்து வரும் ஜான் ஹாப்கின்ஸ் கொவைட் டிராக்கர் மற்றும் மத்திய அரசின் சுகாதாரத்துறை இந்தியாவில் ஏற்பட்ட நோய்த்தொற்று பரவல் குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது மத்திய அரசின் புள்ளி விவரத்தின் படி, தேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1076 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,815 -இல் இருந்து 11,439 ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 353 -இல் இருந்து 377ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,190-இல் இருந்து 1,306 ஆக உயர்ந்துள்ளது.
ஆறுதல் அளிக்கும் செய்தி: கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு 28 சதவீதமாக இருந்து நோய்த்தொற்று, தற்போது 24 சதவீதமாக குறைந்துள்ளது. இந்தியாவில் 7 நாட்களுக்கு ஒருமுறை நோய்த்தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரட்டிப்பு அடைந்து வருகிறது. இதற்கு முன் 4 நாட்களுக்கு ஒருமுறை இரட்டிப்பாகி வந்த நிலையில் தற்போது 7 நாட்களுக்கு ஒருமுறை இரட்டிப்பாகி வருகிறது. அதே நேரத்தில் ஆசியாவில் இருக்கும் மற்ற நாடுகளை விட இந்தியா மிக மோசமாக பின் தங்கியுள்ளது.
கடந்த ஒரு வாரமாக இந்தியாவில் தினமும் சராசரியாக 1010 பேர் வீதம் நோய்த்தொற்றுக்கு பாதிக்கப்படுகிறார்கள். நோய்த்தொற்றுக்கு தோற்றுவாயான சீனாவில் கட்டுப்பட்டுத்துள்ள கரோனா, கடந்த இரண்டு நாள்களாக மீண்டும் தலைத்தூக்க தொடங்கியுள்ளது.
நோய்த்தொற்று பரவும் வேகம் சிங்கப்பூர், ஜப்பான், இந்தோனேசியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை விட இந்தியாவில் அதிகமாக உள்ளது. இந்தோனேசியா பிரேசில், ஈரான், ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இந்தியாவை விட குறைவான வேகத்தில்தான் தொற்று பரவுகிறது.
கரோனா நோய்த்தொற்று பாதிப்பில் தென்கொரியா, அயர்லாந்து, சுவீடன், பெரு, ஜப்பான், சிலி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை இந்தியா முந்தி செல்கிறது. ஆனால் இந்தியாவை விட வங்கதேசத்தில் அதிகமாக தொற்று பரவுகிறது. வங்கதேசத்தில் 826 சதவீதம் பரவுகிறது. இந்தியாவில் 7 நாட்களில் ஒரு முறை 109 சதவீதம் தோற்று பரவுகிறது. அதே நேரத்தில் வங்கதேசத்தை விட இந்தியாவில் பலி எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. அதாவது 5 நாட்களுக்கு ஒருமுறை பலி எண்ணிக்கை இரட்டிப்பாகி வருகிறது. இதுதான் கவலையளிக்கும் தகவலாக உள்ளது.
இதே வேகத்தில் நோய்த்தொற்று பரவினால் அடுத்த வாரத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 ஆயிரமாக இருக்கும் என்றும், இதனால் அடுத்த மாதத்தில் மருத்துவமனைகள் நிரம்பி வழியும் என்று எச்சரித்துள்ளது.