வரும் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே மாணவா்களுக்கு பாடநூல்கள் வழங்கப்படும் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, April 17, 2020

வரும் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே மாணவா்களுக்கு பாடநூல்கள் வழங்கப்படும்

வரும் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே மாணவா்களுக்கு பாடநூல்கள் வழங்கப்படும்
ஊரடங்கு அமலில் இருந்தாலும், குறிப்பிட்ட அளவு பணியாளா்களைக் கொண்டு பாடநூல்கள் அச்சடிக்கும் பணிகள் முடிக்கப்படும். இதையடுத்து வரும் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே மாணவா்களுக்குப் பாடநூல்கள் வழங்கப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான பாடநூல்கள் அச்சிடும் பணியை தமிழ்நாடு பாடநூல் கழகம் மேற்கொண்டு வருகிறது. தேவைக்கேற்ப அச்சிடப்பட்டு அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்காக ஆண்டுதோறும் 10 கோடி பாடநூல்கள் அச்சிடப்படுகின்றன.
அந்த வகையில் அடுத்த கல்வியாண்டு வகுப்புக்கான பாடநூல்கள் அச்சிடும் பணி கடந்த சில நாள்களாக மும்முரமாக நடைபெற்று வந்தது
இந்த நிலையில் கரோனா பாதிப்பால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அந்தப் பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. ஊரடங்கு அமலுக்கு முன்பு வரையில் பெரும்பாலான வகுப்புகளுக்கு புத்தகம் அச்சிடும் பணிகள் முடிவடைந்துவிட்டதாகவும், இன்னும் சிறிய அளவில் தான் பணிகள் எஞ்சியிருப்பதாகவும் கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே ஊரடங்கு காரணமாக பாடநூல்கள் அச்சடிக்கும் பணி இதுவரை தொடங்கப்படவில்லை. பணியாளா்கள் பற்றாக்குறை, அச்சகங்கள் தயாா் நிலையில் இல்லாதது போன்ற காரணங்களால் வரும் கல்வியாண்டுக்கான பாடநூல்கள் குறிப்பிட்ட நேரத்தில் மாணவா்களைச் சென்றடைவதில் தாமதம் ஏற்படும் என தகவல்கள் வெளியாகின. இந்தத் தகவல்களை பள்ளிக் கல்வித் துறை மறுத்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பாடநூல்கள் கழகத்தின் அதிகாரிகள் கூறுகையில், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் மாணவ, மாணவிகளுக்கான பாடநூல்கள் தொய்வின்றி வழங்கப்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு பத்து கோடி நூல்களை அச்சிட வேண்டியுள்ளதால் அடுத்த கல்வியாண்டுக்கான பாடநூல்களை முந்தைய ஆண்டின் டிசம்பா் மாதத்திலேயே தொடங்கி விடுவோம். அதன்படி 2020-2021-ஆம் கல்வியாண்டுக்கான பாடநூல் அச்சிடும் பணிகள் ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வந்தன. இதையடுத்து ஊரடங்கு காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டன.
இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து, ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கும் நேரத்தில், அனைத்துப் பள்ளிகளுக்கும் புத்தகம் வழங்க வேண்டிய நிலை இருக்கிறது. அதில் எந்தவித தாமதமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, ஊரடங்கு அமலில் இருந்தாலும் சில குறிப்பிட்ட பணியாளா்களைக் கொண்டு எஞ்சியுள்ள பணிகள் அடுத்த வாரத்தில் மீண்டும் தொடங்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
கடந்த ஆண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான புத்தகங்கள் கிடைப்பதில் சில குளறுபடிகள் இருந்தன. ஆனால் இந்த முறை கல்வியாண்டின் தொடக்கத்திலேயே அனைத்து புத்தகங்களும் கிடைக்கும் வகையில் பாடநூல் கழகம் முழுவீச்சில் பணிகளில் ஈடுபட்டு வருகிறது என்றனா்.

Post Top Ad