கேரளாவில் கொரோனா அடங்கியது எப்படி? புதிய தகவல்!
இந்தியாவில் கொரோனா பாதித்த மாநிலங்களில் கேரளா முன்னணியில் இருந்தது. தற்போது அங்கு வைரஸ் பாதிப்பு குறைந்து உள்ளதாக அரசு அறிவித்து உள்ளது
இது குறித்து கேரள சுகாதாரத்துறை மந்திரி சைலஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
கேரளாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. நாங்கள் இந்த எண்ணிக்கையை மேலும் குறைக்க விரும்புகிறோம். அதுதான் எங்கள் நோக்கம். கடந்த சில நாட்களில் நாங்கள் செய்துவரும் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இருப்பினும் மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்கள் இருப்பதால் நாங்கள் முழுமையாக நிவாரணம் பெற முடியாது.
கேரளாவில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டும் போதாது. இது ஒரு தொற்றுநோய். நமது அண்டை மாநிலங்களில் வழக்குகள் அதிகரித்து வருகின்றன. இது கவலைக்குரியது. தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்கள் இதுவரை 1,075 பேர் மற்றும் 11 இறப்புகள் பதிவாகி உள்ளன, இதேபோல் கர்நாடகாவில் 247 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வைரசின் தன்மை என்னவென்றால், முதலில் மிகக் குறைவான பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் தொடர்பை கண்டறியத் தவறினால் அதிகமான மக்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, நாங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம். அதுதான் நாங்கள் கொடுக்க விரும்பும் செய்தி.
கடுமையான தனிமைப்படுத்துதல், துல்லியமான தொடர்பு கண்டறிதல் மற்றும் தனிமைப்படுத்தும் முறை ஆகிய அனைத்தும் கொரோனா பாதித்தவர்களுக்கு வெற்றிகரமாக சிகிச்சையளிக்க உதவி உள்ளன.
கேரளாவில் நேற்று முன்தினம் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. 36 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா அதிகம் உள்ள காசர்கோடு மாவட்டத்தில் மொத்தம் 36 பேரில் 28 குணமடைந்துள்ளனர். தற்போது, மாநிலத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் 194 பேர் சிகிச்சையில் உள்ளனர். 1 லட்சத்து 16 ஆயிரம் பேர் கண்காணிப்பில் உள்ளனர். 179 பேர் குணமாகி உள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர்.