ஆன்லைன் கிளாஸில் கல்லா கட்டும் தனியார் பள்ளிகள்!
கொரோனா தொற்று அதிகமான மார்ச் மாதம்தான் 11 மற்றும் 12 - ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கியது . 12 - ம் வகுப்புத் தேர்வுகள் முடிந்த நிலையில் , 11 - ம் வகுப்புத் தேர்வில் ஒன்று மட்டும் மீதமிருக்க , நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் , அதுவும் ரத்து செய்யப்பட்டுவிட்டது . பள்ளி மாணவர்கள் எல்லாம் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள் .
ஏற்கனவே , ஆன்லைன் மூலம் பாடம் நடத்தும் பைஜூஸ் , வேதாந்தா , அப்கிரேட் , அக்காடமி போன்ற பல தனியார் நிறுவனங்கள் , இந்த நேரத்தைப் பயன்படுத்தி கல்லா கட்டி வருகின்றன . அதே பாணியில் 10 மற்றும் 11 - ம் வகுப்பு மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுப்பதாகத் தெரிகிறது.
இதுகுறித்து 10 - ம் வகுப்பு படிக்கும் தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் விசாரித்தபோது ,
10 - ம் வகுப்பு தேர்வுக்காக நாங்கள் கடுமையாக தயாராகிக் கொண்டிருந்தோம் இந் நிலையில்தான் , கொரோனா தொற்று இந்தியாவில் வேகமாகப் பரவத் தொடங்கியது . பிரதமர் ஊரடங்கை அமல்படுத்தியபோதுகூட தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் என்று காத்திருந்தோம் . ஆனால் , மார்ச் 25 - ம் தேதி முதல் 21 நாள் ஊரடங்கு
அமல்படுத்தப்பட்டதால் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன .
விட்டாச்சு லீவு என்று நாங்களும் புத்தகத்தை வைத்துவிட்டு குடும்பத்தோடு விளையாடிக் கொண்டிருந்தோம் . திடீரென அத்தனை மாணவர்களுக்கும் அவரவர் பள்ளிகளில் இருந்து தகவல் வந்தது . அதில் , 1 முதல் 9 - ம் வகுப்பு வரை ஆல் பாஸ் என அறிவித்த தமிழக அரசு , 10 - ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து என அறிவிக்கவில்லை .
அதனால் காலதாமதமாக நடைபெறும் வாய்ப்புள்ளது . எனவே ஆசிரியர்கள் வீட்டிலிருந்தபடியே வீடியோவில் பாடத்தை நடத்தி வாட்ஸ் ஆப்பில் அனுப்புவார்கள் . அதனை நீங்களும் வீட்டிலிருந்தபடியே பார்த்துப் படித்து , சந்தேகங்கள் இருந்தால் வாட்ஸ் ஆப்பிலேயே கேட்டுக்கொள்ளலாம் என்றும் , ' வாட்ஸ் ஆப்பிலேயே மாதிரித்தேர்வும் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது .
இந்த கொரோனாவிலும் நாங்கள் பள்ளிக்குப் போகாமலே பாடம் படிக்கிறோம் . இப்படியெல்லாம் பாடம் நடத்தினால்தான் அடுத்த வருடத்துக்கான ஃபீஸை இப்போதே வசூல் செய்ய முடியும் , இப்படி தனியே நடத்தும் ஆன்லைன் வகுப்புக்கும் ஃபீஸ் வாங்கமுடியும் என நினைக்கின்றனர் " என்றனர்.