`நன்றியுணர்வைக் காட்ட நினைத்தோம்..!’ - அரசுப் பள்ளியை ஜொலிக்க வைத்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
கடந்த 9 ஆண்டுகளாக பெயின்ட் வாசனையைக்கூட கண்டிராத அரசுப் பள்ளி சுவர்களை வண்ணமயமாக்கும் பணியில் இறங்கினர்.
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தினசரி கூலித் தொழிலுக்குச் செல்பவர்கள். அவர்கள் இந்த லாக்டவுன் உத்தரவால் பெரும் இன்னலைச் சந்தித்து வருகிறார்கள். ஊரடங்கு உத்தரவின் ஆரம்பத்தில் தொழிலாளர்கள் பலர் தங்களின் சொந்த ஊர்களுக்கு நடைப்பயணமாக, பயணத்தைத் தொடங்கினார்கள்.
பலர் இன்றும் நடந்து தங்களின் ஊர்களுக்குப் பயணமாகிறார்கள். தினமும் நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்கள், உண்ண உணவின்றி, படுக்க இடமின்றி பயணமாகும் காட்சிகளைப் புகைப்படங்களாகவும் வீடியோவாகவும் பார்த்திருப்போம். எல்லாம், கண்ணீர் வரவைக்கும் காட்சிகள்.
இதன் பின்னர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நலனிலும் அக்கறை கொள்ள வேண்டும் எனக் குரல்கள் எழ, மத்திய அரசு, மாநில அரசுக்கு சில உத்தரவுகளைப் பிறப்பித்தது. அதன் பின்னர் நடந்து செல்பவர்கள், தடுத்து நிறுத்தப்பட்டு அவர்கள் பல்வேறு பகுதிகளில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்கு மாநில அரசு மூலம் உணவும் மற்ற வசதிகளும் வழங்கப்பட்டு வருகிறது. பல பகுதிகளில் உள்ளூர் மக்களும் தொழிலாளர்கள் நலனில் அக்கறை கொண்டு உதவுகிறார்கள்.
ராஜஸ்தான் மாநிலம், சிகார் மாவட்டத்தில் உள்ள ஓர் அரசுப் பள்ளியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பலரும் இந்த அரசுப் பள்ளிக் கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டிருநதனர். அவர்கள் அனைவரையும் அந்தக் கிராம மக்கள் சிறப்பாகக் கவனித்துக் கொண்டனர்.
தங்களை கனிவோடு கவனித்துக்கொண்ட அந்தக் கிராம மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என அந்தத் தொழிலாளர்கள் எண்ணினர். பணி செய்யும் இடத்தில் கையில் காசு இல்லாததால்தான் சொந்த ஊர்களுக்கே பயணம் மேற்கொள்ள முடியவில்லை. தங்களுக்கு உதவிய மக்களுக்கு பணத்தால் உதவ முடியாது என அவர்களுக்குத் தெரியும். அதேநேரம், அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த அரசுப் பள்ளிக் கட்டடம் மிகப் பழைமையானதாகச் சேதமடைந்த நிலையில் இருந்ததைக் கண்டு, அதைச் சரி செய்யலாம் என முடிவெடுத்தனர்.
அந்த ஊர் தலைவரிடம் இதுதொடர்பாகப் பேசி தங்களுக்கு பெயின்ட், பிரஷ் உள்ளிட்ட சில பொருள்களை வாங்கி தந்து உதவ முடியுமா எனக் கேட்டுள்ளனர். உடனடியாக அவர்களும் உதவ, தொழிலாளர்கள் அனைவரும், கடந்த 9 ஆண்டுகளாக பெயின்ட் வாசனையைக்கூட கண்டிராத அரசுப் பள்ளி சுவர்களை வண்ணமயமாக்கும் பணியில் இறங்கினர்.
அந்தத் தொழிலாளர்கள் பேசுகையில், ``அந்தக் கிராம மக்கள் எங்களுக்குத் தினமும் இலவசமாக உணவு தருகிறார்கள். அவர்களுக்கு நன்றி உணர்வுடன் ஏதாவது திருப்பி செய்ய வேண்டும் என நினைத்தோம்” என்கிறார்கள்.
தற்போது இந்தப் புகைப்படங்கள்தான் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன. இந்தத் தொழிலாளர்களின் நன்றியுணர்வுக்கு சமூக வலைதளம் மூலம் ஹார்ட்டின்களைப் பறக்கவிட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.