எந்த வயதில் எந்த மாதிரியான உடற்பயிற்சியை செய்ய வேண்டும் எனத் தெரியுமா?
நம் உடல் வயதிற்கு ஏற்ப மாற்றமடையும். அதனால் தான் ஒரே வகையான உடற்பயிற்சி அனைத்து வயதினருக்கும் பொருந்துவதில்லை. வாழ்வின் ஒவ்வொரு நிலையை அடையும் போது, நீங்கள் செய்யும் உடற்பயிற்சியிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தால், அதற்குரிய சரியான பலனைப் பெறலாம்.
சரி, எந்த வயதில் எந்த மாதிரியான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது என்று நீங்கள் கேட்கலாம். எனவே தமிழ் போல்ட்ஸ்கை எந்த வயதில் எந்த உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் சரியான நன்மையைப் பெற முடியும் என்று கொடுத்துள்ளது. அதைப் படித்து ஆண்கள் தவறாமல் பின்பற்றி வந்தால், வாழ்நாளின் அளவை நீட்டித்து ஆரோக்கியமாக வாழலாம்.
16-19 வயது
இந்த வயதில் ஓர் சிறுவன் மெதுவாக ஆணாக மாற ஆரம்பிப்பதால், ஹார்மோன்களின் செயல்பாடு வேகமாக இருக்கும். எனவே இந்த வயதில் பளு தூக்கும் உடற்பயிற்சிகளை செய்வதற்கு பதிலாக, நல்ல விளையாட்டுக்களில் ஈடுபடுவது, அவர்களின் உடலை நெகிழ்வுத்தன்மையுடன் வைத்துக் கொள்ளும். மேலும் விளையாட்டுக்களில் ஈடுபடுவதால் தடகள திறன்கள் மேம்படுத்தப்பட்டு, நல்ல தடகள வீரராக ஆகும் வாய்ப்புள்ளது.
20-30 வயது
இந்த வயதில் ஓர் ஆண் தசைகளை வளர்க்கும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. அதற்கு நல்ல உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்து, பயிற்றுநர் சொல்லிக் கொடுக்கும் படி பின்பற்றி வாருங்கள். மேலும் இந்த வயதில் விளையாட்டுக்களில் ஈடுபடுவதைக் குறைத்து, தசைகளை வளர்க்க ஆரம்பியுங்கள். ஏனெனில் இது தான் தகைளை வளர்ப்பதற்கான மற்றும் தசைகள் வளர்வதற்கான சிறந்த வயது.
30-40 வயது
இந்த வயதில் தொப்பை வர ஆரம்பிப்பதோடு, டெஸ்டோஸ்டிரோனின் அளவை குறைய ஆரம்பிக்கும். எனவே இந்த வயதில் HIIT உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. இதனால் உடல் ஆரோக்கியம் சீராக பராமரிக்கப்படும்.
40-50 வயது
இந்த வயதில் தசைகளை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்வது சவாலான ஒன்று. எனவே இந்த வயதில் எக்காரணம் கொண்டும் உடற்பயிற்சி செய்வதை நிறுத்தக்கூடாது. தினமும் சிறிது பளுத் தூக்கும் பயிற்சி, ரன்னிங் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
50-60 வயது
இந்த வயதில் சைக்கிளிங் செய்யலாம் போன்று தோன்றும். ஆனால் உங்கள் தசைகளின் அடர்த்தியைப் பராமரிக்க, வலிமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் இந்த வயதில் பளுத் தூக்குவது என்பது சாதாரணமானது அல்ல. யார் ஒருவர் 20 வயதிலிருந்தே பளு தூக்கி வருகிறாரோ, அவர்களால் மட்டுமே 50 வயதிலும் பளு தூக்க முடியும். ஒருவேளை உங்களால் பளு தூக்க முடியாவிட்டால், தினமும் யோகா செய்து வாருங்கள். இதுவும் அற்புதமான ஓர் உடற்பயிற்சியே.
60-70 வயது
இந்த வயதில் நீங்கள் இன்னும் வலிமையுடன் தரமான வாழ்க்கை வாழ்வதற்கு, இளமையில் நீங்கள் மேற்கொண்ட உடற்பயிற்சிகள் தான் காரணம். எனவே இந்த வயதில் உடற்பயிற்சி செய்வதை நிறுத்தாமல், தினமும் ஏதாவது ஒரு உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். அதிலும் நீங்கள் உங்கள் தசைகளை வலிமையுடன் வைத்துக் கொள்ள நினைத்தால், முடிந்த அளவிலான பளுவைத் தூக்குங்கள்.