கொரோனாவுக்குப் பிறகான உலகம் எவ்வாறு இருக்கும்? ஒரு விரிவான அலசல்! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, April 18, 2020

கொரோனாவுக்குப் பிறகான உலகம் எவ்வாறு இருக்கும்? ஒரு விரிவான அலசல்!

கொரோனாவுக்குப் பிறகான உலகம் எவ்வாறு இருக்கும்? ஒரு விரிவான அலசல்!


கொரோனா வைரஸின் தாக்கம் முடிவுற்ற பிறகு உலகம் என்னவாக இருக்கும் என்பதே இன்று பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதைப் பற்றி அலசுகிறது இந்தக் கட்டுரை.



`மாற்றம் ஒன்றே மாறாதது'. உலகம் இயங்கிக் கொண்டிருப்பதற்கான அடிப்படைக் கோட்பாடு இது. சில நெருக்கடிகள் மிகத் தீவிரமாக இருக்கும் போது அதன்வழி ஏற்படும் மாற்றங்களும் உலகம் முழுவதற்குமானதாக இருக்கிறது.

இந்தியாவில் ரயில், பேருந்து, ஆட்டோ என அனைத்துப் போக்குவரத்தும் நிறுத்தப்படும், பள்ளி, கல்லூரிகள் இயங்காது, திரையரங்குகள், மால்கள் மூடப்படும், கடற்கரைக்கெல்லாம் லீவு விடப்படும், சென்னை பெங்களூரு போன்ற பெரு நகரச் சாலைகளில் டிராஃபிக் இருக்காது, அவ்வளவு ஏன்? பிரிந்து வாழ்ந்தால் கோடி நன்மை என்று அறிவுறுத்தப்படும், இப்படியெல்லாம் ஒரு மாதத்திற்கு முன்பு யாராவது நம்மிடம் சொல்லியிருந்தால் சிரித்திருப்போம். ஆனால் இன்று அதுதான் இயல்பு வாழ்க்கை.

இங்கு மட்டும் அல்ல; உலகம் முழுவதுமே இன்று உச்சரிக்கப்படும் ஒரே வார்த்தை கொரோனா வைரஸ். அதைத் தடுப்பதற்காகவும் கட்டுப்படுத்துவதற்காகவும் உலக நாடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகப் போராடிக்கொண்டிருக்கிறது. அடுத்த சில வாரங்களில் உலக நாடுகள் எடுக்கும் முடிவுகள் இன்னும் பல ஆண்டுகளுக்கான நமது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். நாம் இதுவரை அறிந்திருந்த உலகம் அது முற்றிலுமாக உருமாறி இருக்கும்.




அவநம்பிக்கையை விதைப்பதோ, பயமுறுத்துவதோ, அசாதாரண மனநிலையை உருவாக்குவதோ, தேவையற்ற குழப்பத்தைக் கொடுப்பதோ இந்தக் கட்டுரையின் நோக்கம் அல்ல. மாறாக உலக அறிவுஜீவிகளின் கருத்துகள், நிபுணர்களின் கணிப்புகள், பல்வேறு சர்வதேச இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட விரிவான அலசலே. நாளை எப்படி இருக்கும் என்ற ஆயத்தத்தோடு, நம்மை நாம் தயார் செய்து கொள்வதற்கான அவசியத்தை உணர்த்துவது, மாற்றங்கள் நமக்கான வாய்ப்புகளாக மாறும் என்பதை உலக யதார்த்தத்தோடு அணுக வேண்டியதன் அவசியத்தை நாம் உணர வேண்டும்.

புயல் அடித்து ஓய்ந்தது, இரு வாரங்களில் இயல்பு நிலை திரும்பியது என்பது போல இம்முறை நாம் இதைக் கடந்து செல்ல இயலாது. ஏனெனில் இனிவரும் இயல்புநிலை நாம் இதுவரை கண்டிராததாக இருக்கும். ஹாலிவுட் படங்களில் காட்டுவதுபோல ராட்சத சுனாமிகளும், எரிமலைகளும், பூமி பிளவுகளும் நிகழ்ந்து கோடிக்கணக்கானோர் மறித்து, உலகின் புவியியல், உயிரியல் ஆகியவற்றில் மாற்றங்கள் இருக்கப்போவதில்லைதான். 

ஆனால், இந்தக் கொரோனா வடிவிலான பெரும் நெருக்கடியால் உலக அளவில் அரசியல், பொருளாதாரம், பருவநிலை போன்றவற்றில் பல வகை மாற்றங்கள் நிகழும் என்பதே உண்மை. அவை நேர்மறையான மாற்றங்களாகவோ, எதிர்மறையான மாற்றங்களாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்... தற்போது உலகம் முழுவதும் அரங்கேறி வருகின்ற சம்பவங்களை வைத்து அந்த மாற்றங்களுக்கான இருவேறு சாத்தியக் கூறுகளை ஆராய்கிறது இந்தக் கட்டுரை.

அரசியல் மாற்றங்கள்



உலகத் தலைவர்கள் எல்லாம் கொலைக் களத்தில் நிற்கிறார்கள். அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் பல கோடி மக்களின் வாழ்வை, வரலாற்றை மாற்றியமைக்க வல்லது. பெரும் சவால்கள் நிறைந்த இந்தத் தருணம் அவர்களுக்கான மாபெரும் வாய்ப்பும் கூட. வெறும் பேச்சுகளும், காற்றில் பறக்கும் உத்தரவாதங்களும் இனி செல்லாது. 

செயல்... அவர்களின் நேரடி கள செயல்கள் மட்டுமே அவர்களுக்குத் துணை நிற்கும், அவர்களின் இன்றைய தவறுகளுக்கான விளைவுகள் நாளையே தெரியும். மக்களுக்காகச் சிந்தித்து இந்த நெருக்கடி நேரத்திலும் முறையாக வழிநடத்தும் தலைவர்கள் இனம் காணப்படுவார்கள். 

கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்த பிறகு, இந்தத் தலைவர்களின் ஒவ்வொரு முடிவும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு விமர்சிக்கப்படும். ஆட்சி மாற்றங்கள், தேர்தல் தோல்விகள் என இது தலைவர்களுக்கும் கட்சிகளுக்குமான தனிப்பட்ட சவால்.

ஆனால், உலக அரசியல் மாற்றம் இதைவிடப் பெரியதாய் இருக்கும் என்பது ஆய்வாளர்களின் கருத்து. அரசியல் ரீதியாகப் பல மாற்றங்களை உலகம் காணலாம். அவை...




கண்காணிப்புகள் வழங்கும் சர்வாதிகாரம் - நீர்த்துப்போன ஜனநாயகம்:
பெரும்பாலான நாடுகளில் மாநிலக் கூட்டாட்சிகள் எல்லாம் மத்திய அரசின் முடிவுகளுக்குக் கட்டுப்படுகின்றன, மக்களின் பல அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவது உயிர் காப்பதற்கான அவசியமாக மாறியிருக்கிறது. 

மக்களின் செயல்பாடுகள் முற்றிலும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்படுவது சிறந்த ஆட்சி எனப் பாராட்டப்படுகிறது. இன்றைய நிலையில் இப்படியான சர்வாதிகாரப் போக்குகள் அவசியமானதாக இருக்கலாம்; ஆனால் ஆட்சியாளர்கள் இந்த நெருக்கடி நிலையின் முடிவில் அதைத் தக்க வைத்துக்கொள்ள எத்தனிக்கக் கூடும்.

உதாரணத்திற்கு, இஸ்ரேலில் தீவிரவாதிகளைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படும் கண்காணிப்பு தொழில்நுட்பம் கொரோனா நோயாளிகளைக் கண்டறிய ஒட்டுமொத்த மக்கள் மீதும் பிரயோகிக்கப்படுகிறது. சீனாவில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம், ஒருவரின் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை வைத்து அவரின் முழு நடமாட்டத்தையும் அரசு அறிந்துகொள்ள உதவுகிறது. 

முன்பெல்லாம் ரகசியமாகச் செய்யப்பட்ட இந்தக் கண்காணிப்பு, தற்போது எவ்வித எதிர்ப்புமின்றி மக்களின் ஆதரவோடு, ஒப்புதலோடு செய்யப்படுவதே நிகழ்ந்திருக்கும் பெரும் மாற்றம். இனி இது தொடருமானால், பெரும் ஜனநாயகங்கள் நீர்த்துப்போகக் கூடும்.

சோசியலிசத்தை நோக்கி உலகம் நகரலாம்:

கொரோனா நெருக்கடி நம்மைக் கடக்கும் நேரத்தில், உலகின் பல தேசங்கள் சோசியலிசக் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தியிருக்க வாய்ப்பிருக்கின்றது. பிரிட்டன், ஸ்பெயின், டென்மார்க் உள்ளிட்ட நாடுகள் ஏற்கெனவே அதற்கான பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கின்றன.



மருத்துவமனைகள் எல்லாம் அரசுடைமை ஆக்கப்பட்டிருக்கின்றன. வேலையிழந்த தொழிலாளர்களுக்கு அரசு ஊதியம் வழங்குகிறது. இவையெல்லாம் சந்தைப் பாதுகாப்புக்காக இன்றி, உயிரைப் பாதுகாக்கச் செய்யப்படுகின்றன. இதே நிலை தொடர்ந்தால், அரசு தன்னுடைய கோட்பாடுகளைச் சந்தையை மையப்படுத்தி இல்லாமல் மக்களை மையப்படுத்தி மாற்றும் நிலை ஏற்படலாம். 

மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, எரிசக்தி, இருப்பிடம் உள்ளிட்டவை முதன்மையாகக் கருதப்படும். இவையெல்லாம் சந்தை சாராது, லாப நோக்கம் இன்றி எல்லா மக்களுக்கும் கிடைக்க வழிவகை செய்யப்படும். ஒருவரின் தனிப்பட்ட வருமானங்களைத் தாண்டி அடிப்படை வசதிகள் மக்களுக்குக் கிடைக்க அரசு முயற்சிகள் எடுக்கலாம்.

உழைப்பிற்கும் ஊதியத்திற்கும் நேரடித் தொடர்பு துண்டிக்கப்பட்டு, அனைவருக்கும் ஒரே மாதிரியாக, தேவைக்கேற்ப அரசு ஊதியம் வழங்கப்படலாம் அல்லது ஒருவரின் வேலையின் அவசியத்தை, தேவையைப் பொறுத்து ஊதியம் வழங்கப்படலாம். உதாரணத்திற்கு, மருத்துவர்கள், துப்புரவுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் அதிக வருமானமும், ஒரு விளம்பர நிறுவனத்தில் வேலை பார்ப்பவருக்கு அதை விடக் குறைவான ஊதியமும் வழங்கப்படலாம். இவையெல்லாம் பெரும் கொள்கை அடிப்படையிலான மாற்றங்களாக இன்றி, 'survival ' எனப்படும் உயிர்த்திருப்பதற்கான அவசியத்தை முன்னிறுத்திச் செய்யப்படலாம். அப்படி நேர்ந்தால் கொரோனா விட்டுச்சென்ற ஒரு நேர்மறை விளைவாக இது இருக்கும்.


பொருளாதார மாற்றங்கள்:

நம் கண்களுக்கு முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவால் இது. உலகம் பல ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லும் அபாயம் நிறைந்த சூழலில் இருக்கின்றன உலக நாடுகள். சக்தி வாய்ந்த உலகின் பணக்கார நாடுகள் எல்லாம் பெரும் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. பெரும் சிக்கலான சூழலில் வீழ்ந்துகொண்டிருக்கின்றன பொருளாதாரங்கள்.



மக்கள் இயக்கம் முற்றிலும் தடைபட்டிருக்கின்றது, பொருள்கள் தயாரிப்பில் தொடங்கி (production), மக்கள் அதைக் கடைகளில் வாங்கும் நுகர்வு வரை (consumption) அனைத்தும் தடைபட்டிருக்கிறது. பெரும் வணிக நிறுவனங்கள் லாபத்திற்காக இயங்குபவை; அவர்களால் தயாரிப்பில் ஈடுபட முடியவில்லை எனில், அவர்களால் விற்பனையிலும் ஈடுபட முடியாது. 

இது அந்த வணிக நிறுவனங்களின் லாபத்தைக் குறைக்கும். லாபம் இன்றி அவர்களால் நிறைய ஊழியர்களைப் பணியில் அமர்த்த முடியாது. இதனால் வேலையிழப்பு ஏற்படும். வேலை இழந்தவர்களால் எல்லாம் சரியான பிறகும் கூட, சந்தையில் விற்கும் பொருள் களை வாங்க இயலாது.

இதனால் பெரும் வணிக நிறுவனங்களின் லாபம் குறையும், தயாரிப்பு குறையும், இப்படியே இந்தச் சுழற்சி தொடரும். இதற்கான தீர்வு ஒன்று மட்டுமே, அரசாங்கங்கள் தலையிட்டு மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்க வேண்டும். 

சிறு குறு தொழில் வளர்ச்சிக்கு அரசு நிதி அளித்து உதவ வேண்டும், அதன் வழி வேலை வாய்ப்புகளைப் பெருக்க வேண்டும். இவ்வழியாகத்தான் தற்போதைய பொருளாதாரச் சரிவிலிருந்து பல நாடுகள் மெல்ல மீண்டெழ முடியும்.

அல்லது, தேவைக்கான உற்பத்தி, அத்தியாவசிய நுகர்வு எனும் புதிய பொருளாதார கலாசார மனநிலைக்கு மக்கள் மாறக்கூடும். இந்தியாவின் நுகர்வுக் கலாசாரம் என்பது, மக்களின் தேவைக்குப் பொருள்களைத் தயாரிப்பது அல்ல. தயாரிக்கப்படும் பொருள்களுக்கான தேவையை மக்களிடம் உருவாக்கி, விளம்பரங்கள் உட்படப் பல வழிகளில், ஒரு அழுத்தத்தைக் கொடுத்து வாங்க வைப்பது. உதாரணத்திற்கு, தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷங்களுக்குப் புத்தாடை வாங்கும் நமது நுகர்வு முறை மாறி நீண்ட நாள்களாகிறது.

இப்போதெல்லாம், மாதத்திற்கு ஒன்று, வாரத்திற்கு ஒன்று, அடுத்த வீட்டு விசேஷத்திற்கு ஒன்று எனத் தேவைக்கு மீறி வாங்கி குவிப்பதாக மாறியிருக்கிறது. இனி இவையெல்லாம் மாறும், மக்களின் செலவழிக்கும் திறன் குறையும், தேவைக்காக மட்டும் ஒரு பொருளை வாங்கும் பழக்கம் அதிகரிக்கும், இது அத்தியாவசியப் பொருள் உற்பத்தியைப் பெருக்கும். நுகர்வு கலாசாரத்தில் ஏற்படும் இந்த மாற்றம் உற்பத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தி, நமது பொருளாதாரத்தைச் சந்தை சார்ந்த உற்பத்தியிலிருந்து, மக்கள் சார்ந்த உற்பத்திக்கானதாக மாற்றும்.




பருவநிலை மாற்றங்கள்:


அரசியல், பொருளாதாரம் இப்படிப் பல மாற்றங்கள் நிகழும் போதிலும், நமக்கு மிகவும் அவசியமான ஒரு மாற்றம் நிகழாது என்கிறார்கள் அறிஞர்கள். அது பருவநிலை மாற்றத்தில் முன்னேற்றம். இயக்கம் இன்றி மக்கள் பல நாள்களாக வீடுகளில் இருப்பதால், போக்குவரத்து தொடங்கி தொழிற்சாலைகள் வரை சுற்றுச்சூழலைப் பாதிக்கும் பல காரணிகள் செயலிழந்து இருக்கின்றன. 

வெனிஸ் நகர நீர்வழிகளில் டால்பின் சுற்றுவது முதல், பல மைல் தொலைவிலிருந்து ஒரு இமாலய சிகரம் தெரிவது வரை இயற்கை சற்று தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டிருக்கிறது என்பது உண்மை தான். ஆனால் இது நிரந்தரமல்ல என்பதே நிபுணர்கள் சொல்லும் கருத்து.

நாம் அசுத்தப்படுத்திய இயற்கையை மீட்டெடுக்க, காற்றைச் சுத்தப்படுத்த, மூன்று மாதங்கள் போதாது என்பதே உண்மை. சீனாவில், மீண்டும் மக்களின் இயக்கம் தொடங்கிய நான்கு வாரங்களில் அங்கு வெளியாகும் நைட்ரஜன் வாயுக்களின் அளவு பழைய படி அதிகரித்திருக்கிறது. இதுபற்றி டெக்ஸாஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் காதரின் ஹேஹோ கூறுகையில், "இந்தக் கொரோனா நெருக்கடியால் உலகில் கார்பன் வெளிப்பாடு குறையாது.

ஏனெனில் தற்போது அது குறைந்திருப்பதற்கான காரணம் மனிதனின் செயல்பாடுகளில், மனநிலையில் ஏற்பட்டிருக்கும் நிரந்தர மாற்றத்தினால் அல்ல. புதை படிவ எரிபொருள்களுக்கு மாற்றாக நாம் புதுப்பிக்கக் கூடிய எரிசக்தியைப் பயன்படுத்த ஆரம்பித்ததால் அல்ல. மாறாக மக்களின் தற்காலிக நெருக்கடியால், நிரந்தரமற்ற குறுகிய கால இயக்கமற்ற நிலையால், சூழலின் தேவையால் ஏற்பட்டது. 



ஆகவே இது நிரந்தரமாக நமக்கு நன்மையைத் தராது" என்கிறார். மேலும் சரிவுற்ற பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முனைப்பில், அரசுகளும் மக்களும் சோலார் சக்திகள் உட்படப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சக்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காது என்பதும் கசப்பான உண்மை.

உலகம், தன் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளலாம். பருவநிலை மாற்றத்தால், மக்களின் அலட்சியத்தினால், இயற்கை மக்களைத் தண்டித்திருப்பதாகவே எண்ணுகிறார்கள் பெரும்பான்மையான மக்கள். இயற்கை தன்னை புனரமைத்துக்கொள்ள வல்லது என நம்புவோர், இந்த வைரஸ் பரிணமித்தது அதற்காகவே என்ற கருத்தை முன்வைக்கின்றனர். 

முழுக்க முழுக்க மக்களின் எண்ணப் போக்கைச் சார்ந்த இந்த நம்பிக்கை பெரும்பான்மையானால், சுற்றுச்சூழலை, இயற்கையைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தை மக்கள் உணரக்கூடும். அவ்வாறான ஒரு விழிப்புணர்வு, அரசியல் தலைவர்கள், சுற்றுச்சூழலைக் காப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவது, அதற்காக சில கொள்கை முடிவுகளை எடுப்பது எனச் சில மாற்றங்களை முன்னெடுக்கக் கூடும்.




மக்களின் மனநிலை தீர்மானித்தால், அரசுகள் தங்களின் அரசியல் ஆதாயத்திற்காகவேனும் இயற்கையைப் பாதுகாப்பதில் கூடுதல் கவனம் கொள்ள வாய்ப்பிருக்கிறது. கொரோனா எனும் பெரும்தொற்று அளித்திருக்கும் இந்த உயிர்பயம் மக்களைப் பருவ நிலை மாற்றங்கள், இயற்கை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை குறித்துச் சிந்திக்க வைக்க முடியுமானால். அது மனிதக்குலத்திற்கான வெற்றியே.

பாகுபலியைக் கட்டப்பா ஏன் கொன்றார் என்ற கேள்வியைக் காட்டிலும் குழப்பமானது, கொரோனாவுக்குப் பிறகு என்ன என்ற கேள்வி... வேறு வழியில்லை, விடையறிய நாம் காத்திருக்கவேண்டும். மாற்றங்கள் உறுதி, அதற்கு அரசும் சரி தனிநபரும் சரி, முறையாகத் தயாராவது காலத்தின் கட்டாயம்.

Post Top Ad