மாணவர்களின் குடும்பங்களுக்கு உதவும் பணியில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்
திருப்பூரில், வறுமையால் வாடும் பள்ளி மாணவர்களின் குடும்பங்களுக்கு ஆசிரியர்கள் இணைந்து, உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம், நெய்காரம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பலர், தங்கள் மாணவர்களை தொடர்பு கொண்டு, குடும்ப சூழலை கேட்டறிந்து, தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.
அப்பள்ளி தலைமையாசிரியர், மணிசெல்வன் கூறியதாவது:இப்பகுதியில் தேங்காய் தொட்டி தொழிற்சாலையை நம்பிய குடும்பங்கள் தான் அதிகம். அனைத்தும் முடங்கியதால், வீட்டு வாடகை கொடுக்க முடியாமல், சிலர் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர்.
இவர்களின் குழந்தைகள், அதிகளவில், எங்கள் பள்ளியில் படிக்கின்றனர். பள்ளி ஆசிரியர்கள் இணைந்து, மாணவர்களை தினமும் தொடர்பு கொண்டு, தேவைகளை கேட்டு வருகிறோம். நேரில் உதவ முடியாத பட்சத்தில், அவர்களின் வங்கி கணக்குகளுக்கு, 200, 500, 1,000 ரூபாய் என, முடிந்த தொகையை அனுப்பி வருகிறோம். இதனால், 400க்கும் மேற்பட்ட மாணவர்களின் குடும்பங்கள், தங்கள் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.