`ஏ.சி பயன்பாடு எப்படி இருக்க வேண்டும்?’ - அரசின் கொரோனா வல்லுநர் குழு எச்சரிக்கை - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, April 25, 2020

`ஏ.சி பயன்பாடு எப்படி இருக்க வேண்டும்?’ - அரசின் கொரோனா வல்லுநர் குழு எச்சரிக்கை

`ஏ.சி பயன்பாடு எப்படி இருக்க வேண்டும்?’ - அரசின் கொரோனா வல்லுநர் குழு எச்சரிக்கை


கொரோனா வைரஸ் பரவலின் தீவிரம் காரணமாக நாடு முழுவதும் இரண்டாவது முறையாக மே 3 வரை நீட்டிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கு அமலில் இருப்பதால், மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழல் நிலவி வருகிறது. தற்போது, கோடைகாலம் என்பதால், வீடுகளுக்குள்ளேயே இருக்கும் மக்கள் கோடை வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக, ஏ.சி மற்றும் மின்விசிறிகளையே நம்பி உள்ளனர்.



இந்நிலையில், வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும், அலுவலங்களிலும் ஏசி மற்றும் மின்விசிறி பயன்பாடு குறித்து, இந்திய வெப்ப குளிர்பதன மற்றும் ஏ.சி பொறியாளர்கள் சமூகம் (ISHRAE) தொகுத்த வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா போர்... நம்பிக்கையளிக்கும் தொழில்நுட்பங்கள்!
கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள காலத்தில் ஏ.சி.களின் பயன்பாடு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை, நாட்டின் தட்ப வெப்பநிலை குறித்த தகவல்களை ஆராய்ந்தப் பின் ISHRAE குழுவினர் பரிந்துரைத்துள்ளனர். 

இந்த குழுவில், பொறியியல் கல்வியாளர்கள், வடிவமைப்பாளர்கள், உற்பத்தியாளர்கள், சேவை வழங்குவோர், சுகாதார வசதி வடிவமைப்பாளர்கள், உள்புற காற்று பாதுகாப்பு குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் வல்லுநர்கள் உள்பட, பல்வேறு அறிவியல் துறை வல்லுநர்களும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஏ.சி செயல்படுவதன் மூலம் வெளியாகும் குளிர்ந்த காற்றை மறுசுழற்சி செய்வதற்காக, ஏ.சி பயன்பாடு இல்லாத நேரங்களில் ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. 

இதன் மூலம் உள்புற காற்று வெளியேறவும் , வெளிப்புற காற்று உள்ளே செல்லவும் வழிவகுக்கும் என்பதால் இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஏ.சி. க்கள் செயல்பாட்டில் இல்லாதபோது சாதாரணமாக ஜன்னல்களை திறந்து வைக்கும் நேரத்தை விட, அதிக நேரம் திறந்து வைப்பதன் மூலம் அறைகளை காற்றோட்டமாக வைத்திருக்கலாம் என பரிந்துரைத்துள்ளது.



கொரோனா வைரஸ் தொற்று நிலவி வரும் சூழலில், வீடுகள் மற்றும் அலுவலகங்களில் 24-30 டிகிரி சென்டிகிரேடிலேயே வெப்பநிலையை பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வறண்ட காலங்களில் அறையின் ஈரப்பததை 40 சதவீதத்திற்கும் குறைவாகக் பாராமரிக்கக் கூடாது என தெரிவித்துள்ளதோடு, அவ்வாறு பராமரிக்கும் போது அறையின் வெப்பநிலை உயர்ந்து ஈரப்பதத்தை அதிகரிக்கும் என கூறியுள்ளது.



பெரும்பாலான தண்ணீர் ஆவியாகும் தன்மையுடைய கூலர்களில் (Evaporative Coolers), அவை வாங்கப்படும் போது ஃபில்டர்கள் பொருத்தப்பட்டிருக்காது. ஆனால், வாங்கிய பிறகு ஃபில்டர்களைப் பொருத்திக் கொள்ளலாம். இந்த காலகட்டத்தில், தூசிகளை வடிகட்டுவதற்காகவும், சுகாதாரத்தைப் பேணுவதற்காகவும் அவற்றின் பங்கு முக்கியமானதென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகை கூலர்களில் தண்ணீர் ஊற்றப்படும் பெட்டிகளை சுத்தமாகவும், தண்ணீரை அடிக்கடி மாற்றியும், கிருமிநாசினிகளை கொண்டு சுத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெரும்பாலானோர் மின்விசிறிகள் பயன்பாட்டில் இருக்கும் போது அறைகளில் உள்ள ஜன்னல்களை மூடி வைத்திருப்பர். ஆனால், மின்விசிறிகளைப் பயன்படுத்தும் போது, ஜன்னல்களை ஓரளவிற்கு திறந்து வைக்க வேண்டும் இந்த குழு வலியுறுத்துகிறது. 

மேலும், சிலர் முன்னரே அறைகளில் காற்று வெளியேறுவதற்காகப் பயன்படுத்தப்படும் எக்ஸாஸ்டர் விசிறிகளைப் பொருத்தி இருப்பர். அவ்வாறு இருந்தால் அவற்றையும் மின்விசிறியோடு சேர்ந்து பயன்படுத்தினால், உள்புற காற்றை வெளியேற்றி நல்ல காற்றோட்டம் நிலவ வழி வகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிக மற்றும் தொழில்துறை நிறுவனங்கள் முடிந்த வரை வெளிப்புற காற்றோட்டத்தோடு செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வெற்றிடத்தில் நல்ல காற்றோட்டம் நிலவ வேண்டும் எனில், வெளிப்புறக் காற்றின் அளவானது 70 முதல் 80 சதவீதமாக இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.




நாடு முழுவதும் ஒரு மாதத்திற்கு மேலாக ஊரடங்கு அமலில் இருப்பதால், மால்கள், தியேட்டர்கள், ஜவுளி நிறுவனங்கள் உள்பட அனைத்து வணிக நிறுவனங்களுமே மூடப்பட்டுள்ளன. நிறுவனங்கள் மூடியுள்ள சூழலில், முன்னர் ஏ.சி பயன்பாட்டில் இருந்திருந்தால் அந்த இடங்களில் பூஞ்சைகள், வண்டுகள் ஆகியவை சுகாதார பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். 

மேலும், பறவைகளின் எச்சங்கள், கொறித்து உண்ணக்கூடிய பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், ஊரடங்கு முடிந்து நிறுவனங்கள் திறக்கப்படும் போது பல்வேறு சிக்கல்களை உண்டாக்கும். இதனால், மூடப்பட்டிருக்கும் வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் மின்சார இயந்திரங்கள் அனைத்தும் செயல்படாமல் இருப்பதால் அவற்றிற்கு பொறியியல் மற்றும் சுகாதார பராமரிப்பை இக்குழு பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Post Top Ad