முக கவச வினியோகத்தில் இந்திய அஞ்சல் நிறுவனம்
சென்னை : இந்திய அஞ்சல் நிறுவனம், கடிதங்களை மட்டும் வழங்காமல்; இந்த நெருக்கடி காலத்தில், முக கவசங்கள், மருந்துகள் போன்றவற்றையும் வீட்டு வாசலுக்கே வந்து வழங்குகிறது. இதற்காக இந்த நிறுவனம், புதிதாக ஒரு ஆண்ட்ராய்டு செயலியை அறிமுகம் செய்ய உள்ளது.'போஸ்ட் இன்போ' எனும் இந்த செயலியை, ஆண்ட்ராய்டு போன்களில் தரவிறக்கம் செய்து, பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த செயலியைப் பயன்படுத்தி, முக கவசங்கள், மருந்து பொருட்கள் ஆகியவற்றை அனுப்பலாம். அனுப்பும் பொருட்கள், பெறுநரின் வீட்டு வாசலுக்கே வந்து வினியோகம் செய்யப்படும் என, இந்திய அஞ்சல் நிறுவனம் தெரிவித்துள்ளது.இது குறித்து, இந்நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: நாடு முடக்கப்பட்டிருக்கும் நிலையிலும் முடங்காமல் செயல்பட்டு வருகிறது இந்திய அஞ்சல்.அழுத்தம் மிக்க இந்த காலகட்டத்திலும், அஞ்சலக ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்போது, வழக்கமான பணிகள் தவிர்த்து, முக கவசங்கள், மருந்து பொருட்கள் ஆகியவற்றையும் மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் வழங்கி வருகிறோம். இதற்கான செயலியை, கூகுள் பிளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.