ஊரடங்கில் ஓர் இனிமையான கற்றல் அனுபவம்; வழிகாட்டும் ஆசிரியை
குழந்தைகளுக்கு வீட்டிலேயே எளிதில் கிடைக்கக்கூடிய இலைகள், குச்சிகள் போன்ற பொருட்களைக் கொண்டு கைவினைப் பொருட்கள், பொம்மைகள் செய்யக் கற்றுக்கொடுத்து சூழலைக் காத்து வருகிறார் ஆசிரியர் ரேவதி.
கரோனா வைரஸ் தொற்று யுத்தத்திலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, தனிமைப்படுத்திக் கொள்வதுதான் கரோனாவுக்கு ஒரே மருந்து என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்ற ஊரடங்கு காலத்தில் பெற்றோர் குழந்தைகளையும், தங்களையும் உற்சாகமாக வைத்துக்கொள்ள வீட்டின் அருகிலேயே மிக எளிதாகக் கிடைக்கக்கூடிய காய்ந்த இலைகள், குச்சிகள், பஞ்சு, துணிகள் ஆகியவற்றைக் கொண்டு கைவினைப் பொருட்கள் செய்தல்,
ஓவியம் வரைதல் மூலம் தங்களின் நேரத்தைப் பயனுள்ள வகையில் பொழுதைக் கழிக்கவும், கற்பனைத் திறனை வளர்த்துக் கொள்ளவும் வீட்டில் இருந்தபடியே மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் வழிகாட்டி வருகிறார் புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பம் அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியை ரேவதி.
குழந்தைகளுக்கும் அவற்றை உருவாக்கப் பயிற்சி அளிக்கிறார்.மேலும், கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து நாட்டு மக்களைக் காப்பாற்ற ஒவ்வொருவரும் எத்தகைய பங்களிப்பைச் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பாக இளைஞர் சமுதாயம் எவ்வளவு தீவிரமாக இயங்க வேண்டும் என்பது குறித்தும் 'ஸ்டே ஹோம்-ஸ்டே சேஃப்' என்ற விழிப்புணர்வு வீடியோ பதிவையும் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து ஆசிரியை ரேவதி நம்மிடம் கூறும்போது, "ஊரடங்கு காலத்தில் பெற்றோர்களும், குழந்தைகளும் சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சியிலும் அதிக நேரத்தினைச் செலவழித்துப் பொழுதைக் கழித்து வருகின்றனர்.
இத்தகையச் செயல்பாடுகள் அவர்களுக்கு மனச்சோர்வையும், உடல் சோர்வையும் ஏற்படுத்தி மனநலம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.
ஆகையால் குழந்தைளையும், பெற்றோர் தங்களையும் உற்சாகமாக வைத்துக் கொள்ள வீட்டிலேயே எளிதில் கிடைக்கக்கூடிய காய்ந்த இலைகள், குச்சிகள், பஞ்சுகள், துணிகள், காகிதம் போன்ற பொருட்களைக் கொண்டு பொம்மைகள் உருவாக்குவதல்,
கைவினைப் பொருட்கள் செய்தல், ஓவியம் வரைதல் போன்றவற்றின் மூலம் வீட்டை அழகுபடுத்துதல், குழந்தைகள் தாங்களாகவே பொம்மைகளை வைத்து கற்பனைக் கதை உருவாக்குதல் இதுபோன்ற செயல்பாடுகளால் தங்களின் நேரத்தைப் பயனுள்ள வகையில் பொழுதைக் கழிக்கவும்,
கற்பனைத் திறனை வளர்த்துக் கொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமையும். மிக எளிதாகக் கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு குழந்தைகளுக்குப் பிடித்த பொம்மைகளை உருவாக்கலாம்.
அதனை வைத்து கதைகள் உருவாக்கி நடித்துக் காண்பிக்குமாறு கூறலாம். குழந்தைகளுக்கு கைவினைப் பொருட்களைச் செய்யும் ஆர்வத்தையும் ஏற்படுத்தலாம். தங்கள் பாடங்களில் அவர்கள் அறிந்த விலங்குகள்,
பறவைகள், பூச்சிகள் போன்றவற்றை உருவாக்கி அதைப் பற்றி ஒரு சில வரிகளை எழுதச்சொல்லி குழந்தைகளின் அறிவுக்களஞ்சியத்தைப் பெருக்கவும் வழிவகுக்கலாம்.
இதனால் எந்த ஒரு பொருளையும் வீணாக்கக்கூடது என்ற எண்ணம் அவர்களுக்குத் தோன்றும். தங்கள் வீடுகளை அழகு செய்வதோடு மட்டுமல்லாமல் தூய்மையாகவும் வைத்துக் கொள்ளுவர்.
அதோடு குழந்தைகள் தங்களிடம் வைத்துள்ள கலர் பென்சில், வாட்டர் கலர் பெயிண்ட் இவற்றைக் கொண்டு இயற்கை காட்சிகள், பறவைகள், விலங்குகள், பூக்கள் விரல் அச்சு ஓவியங்கள், பூச்சிகள் மற்றும் விழிப்புணர்வு ஓவியங்களை உருவாக்கலாம்.
இதுபோன்ற செயல்பாடுகளால் குழந்தைகளின் படைப்பாற்றல் திறன் சிறப்படையும்.
குழந்தைகளுக்கு இயற்கை மீது நேசம் ஏற்படும். தாவரங்கள் பற்றிய புரிதலும் உருவாகும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு இணைந்து இதுபோன்ற உற்சாகமான செயல்பாடுகளின் வாயிலாக ஊரடங்கு காலத்தில் மிகவும் மகிழ்ச்சியான சூழலை குழந்தைகளுக்கு தங்களின் வீட்டுக்குள்ளேயே உருவாக்கிட முடியும்.
ஆகவே, ஊரடங்கு நாட்களில் குழந்தைகளுக்கு வாட்ஸ் அப் வழியே இது தொடர்பாகப் பயிற்சி அளித்து வருகிறேன். கரோனா விழிப்புணர்வு வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறேன்"