Paytm App மூலம் இலவசமாக செய்தித்தாள்கள் படிக்கலாம்!
டிஜிட்டல் பணப்பரிமாற்ற சேவைகளை அளித்து வரும் பேடிஎம் செயலி மூலம் பல்வேறு தேசிய மற்றும் பிராந்திய செய்தித்தாள்களை இனி இலவசமாக படிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கரோனா தொற்றை தடுக்கும் வகையில் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் மக்களுக்கு சரியான செய்திகளை கொண்டு சோ்ப்பதும் அவசியமாகும். இதனைக் கருத்தில் கொண்டு பல்வேறு தேசிய மற்றும் பிராந்திய நாளிதழ்களை எங்கள் செயலியைப் பயன்படுத்தி இலவசமாக பொதுமக்கள் படிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்த சேவை இப்போதைக்கு ஆன்ட்ராய்டு அறிதிறன்பேசிகளில் (ஸ்மாா்ட்போன்) மட்டும் கிடைக்கும். ஆப்பிள் ஐபோன்களில் அடுத்தகட்டமாக இந்த சேவை நீட்டிக்கப்படும்.
இந்தியன் எக்ஸ்பிரஸ், பைனான்சியல் எக்ஸ்பிரஸ், பஞ்சாப் கேசரி, மெயில் டுடே உள்ளிட்ட பல நாளிதழ்கள் இப்போது எங்கள் செயலியில் கிடைக்கிறது. அடுத்தகட்டமாக மேலும் பல நாளிதழ்களை எங்கள் செயலி மூலம் தர பேச்சு நடத்தி வருகிறோம் என்று பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.