ஜூன் 30 வரை பொது முடக்கம் நீட்டிப்பு: புதிய தளர்வுகள் அறிவிப்பு
நாடு முழுவதும் கரோனா காரணமாகக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஜூன் 30 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை அத்தியாவசியப் பணிகள் தவிர்த்த அனைத்து நடவடிக்கைகளும் முற்றிலுமாக முடக்கப்படுகின்றன. இதுதொடர்பான, உத்தரவுகளை அந்த மாநில அரசு அமைப்புகள் பிறப்பித்துக் கொள்ளலாம்.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பிற பகுதிகளில் படிப்படியாகத் தளர்வுகள் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான 4-ஆம் கட்ட பொது முடக்கம் நாளை நிறைவடைகிறது. இந்த நிலையில், 5-ஆம் கட்டமாக ஜூன் 30-ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து பிற பகுதிகளில் ஜூன் 8 முதல் பல்வேறு தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
வழிபாட்டுத் தலங்கள், மால்கள், ஹோட்டல் போன்ற பிற தொழில்கள் ஆகியவற்றையும் ஜூன் 8 ஆம் தேதி முதல் திறக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்கள், சம்பந்தப்பட்டவர்களுடன் மாநில/யூனியன் பிரதேச நிர்வாகங்கள் ஆலோசனை நடத்தலாம். இதில் கிடைக்கும் கருத்துகளின் அடிப்படையில், மாநிலங்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு கல்வி நிறுவனங்கள் திறக்கப்படுவது பற்றி ஜூலை மாதம் முடிவெடுக்கப்படும்.
பன்னாட்டு விமானப் போக்குவரத்து, மெட்ரோ ரயில் சேவை, திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுக் கூடங்கள், கூட்ட அரங்குகள் ஆகியவற்றைத் திறப்பது பற்றி நிலைமையைப் பொருத்து முடிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசார, மதம் சார்ந்த திருவிழாக்கள், நிகழ்ச்சிகள் விஷயத்திலும் நிலைமையைப் பொருத்து பின்னர் முடிவுகள் அறிவிக்கப்படும்.
கரோனா தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளுக்கு இணங்க கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எவை என்பதை மாவட்ட நிர்வாகங்கள் முடிவு செய்யலாம். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசியப் பணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
இந்தப் பகுதிகளில் யாரும் உள்ளே நுழைவதோ, வெளியே வருவதோ அனுமதிக்கப்பட மாட்டாது.
மேலும், கரோனா பரவும் வாய்ப்புள்ள பகுதிகளை அடையாளம் கண்டு, மேலும் கூடுதலான கட்டுப்பாடுகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அறிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.