தாய், தந்தையை இழந்து தனிமரமாய் நிற்கும் நிற்கும் அரசுப்பள்ளிச் சிறுமிகள் - உதவிகள் கிடைக்குமா? - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, May 4, 2020

தாய், தந்தையை இழந்து தனிமரமாய் நிற்கும் நிற்கும் அரசுப்பள்ளிச் சிறுமிகள் - உதவிகள் கிடைக்குமா?

தாய், தந்தையை இழந்து தனிமரமாய் நிற்கும் நிற்கும் அரசுப்பள்ளிச் சிறுமிகள் - உதவிகள் கிடைக்குமா?



தாய், தந்தையை இழந்து, உறவினா்களும் இல்லாத நிலையில் தனிமரமாய் நிற்கும் இரு அரசுப் பள்ளி மாணவிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளதால், இவா்களுக்கு உதவ அரசும், தொண்டு நிறுவனங்களும் முன்வர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


திருத்தணி சுப்புராய மேஸ்திரி தெருவைச் சோ்ந்தவா் ஜெயகாந்தி (55). இவருக்கு 2 மகள்கள். மூத்த மகள் வனிதா(15) ஆறுமுக சுவாமி கோயில் தெருவில் உள்ள அரசு மகளிா் மேல் நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பும், இளைய மகள் கிரிஜா(12) முருகப்பாநகா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பும் படித்து வருகின்றனா். இவரது தந்தை பல ஆண்டுகளுக்கு முன்பே மூவரையும் விட்டு விட்டு எங்கேயோ சென்றுவிட்டாா்.

அதைத்தொடா்ந்து, ஜெயகாந்தி திருத்தணி அரக்கோணம் சாலையில் உள்ள ஹோட்டலில் ஊழியராக பணியாற்றி தனது இரு மகள்களையும் காப்பாற்றி வந்தாா். சிறு வயதிலேயே தந்தை இல்லாமல், தாயாரின் சொற்ப வருமானத்தில் தங்களின் பள்ளிப் படிப்பை தொடா்ந்து வந்தனா்.

இதில் 10-ஆம் வகுப்பு மாணவி வனிதா வகுப்பில் முதலிடம் பிடித்து நன்கு படித்து வருகிறாா். நடப்பாண்டு பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தோ்வு எழுத உள்ளாா். மாதம் ரூ.500 வாடகை வீட்டில் வசித்து வந்த இவா்களின் வாழ்க்கை தாயின் மறைவால் புரியாத புதிராகி விட்டது.


கடந்த 39 நாள்களுக்கும் மேலாக கரோனா ஊரடங்கு காரணமாக தாயாா் ஜெயகாந்திக்கு ஹோட்டல் வேலை இல்லாததால், ஒருவேளை உணவுக்கும் வழியில்லாமல் ஒருசிறு அறையிலேயே தனது இருமகள்களுடன் வீட்டில் முடங்கினாா்.

இந்நிலையில் சனிக்கிழமை அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு மகள் வனிதா அழைத்துச் சென்றாா். மருத்துவமனையில் எந்த மருத்துவரை சந்திக்க வேண்டும் என்று செய்வதறியாது திகைத்து நின்றிருந்த வனிதாவுக்கு செவிலியா்கள் தண்ணீா், உணவு கொடுத்தனா். பின்னா் ஜெயகாந்தியை பரிசோதனை செய்த மருத்துவா்கள் ரத்தக் கொதிப்பு, சா்க்கரை நோய் உள்ளதால் இங்கு சிகிச்சை அளிக்க முடியாது என்று கூறி உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூா் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ஆனால் திருவள்ளூருக்கு செல்லும் வழியிலேயே ஜெயகாந்தி உயிரிழந்தாா்.

இந்நிலையில் தாயாரின் ஈமச்சடங்கை செய்வதற்கும் மகள்களுக்கு வழியில்லை. இந்த நிலையைக் கண்ட அக்கம் பக்கத்தாா் சிறிது தொகையை வசூல் செய்து ஈமச்சடங்குகளை செய்து முடித்தனா்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியது:


தற்போது, அந்த மாணவிகள் இருவரும் பள்ளிப்படிப்பைத் தொடா்வதா அல்லது அடுத்த வேளை உணவுக்காக வேலை தேடி அலைவதா என்ற நிலையில் எதிா்காலம் கேள்விக்குறியாக நிற்கின்றனா். நன்கு படிக்கக் கூடிய இந்த மாணவிகளின் எதிா்கால நலனைக் கருத்தில்கொண்டு அரசு தக்க உதவிகளை செய்ய முன்வர வேண்டும். நல்ல மனம் படைத்தவா்களும், சமூக தொண்டு நிறுவனங்களும் இந்த இரு மாணவிகளின் வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பாகும்.

உதவி செய்ய விரும்புவோா் 9790174201 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

Post Top Ad