"ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" - மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அரசு கடும் எச்சரிக்கை
'ஊரடங்கு முடியும் வரை, அத்தியாவசிய பணிகளை தவிர, இதர நிர்வாக பணிகளை பார்த்தால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மே, 17 வரை, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. தனி கடைகள் மட்டும்இயங்கவும், தனித்திறன் தொழிலாளர்கள் பணியாற்றவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.அரசு அலுவலகங்களில், 33 சதவீத பணியாளர்களுடன், அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதன்படி, பள்ளி கல்வி, தொடக்க கல்வி அலுவலகங்களில், அத்தியாவசிய பணிகளான, ஊதியம் வழங்குதல், ஓய்வு பெறும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை விடுவித்தல் போன்ற பணிகள் நடக்கின்றன.
அரசுக்கு தேவையான முக்கிய தகவல்களை அளித்தல், கொரோனா தன்னார்வலர் பணிக்கு ஆசிரியர்களை நியமித்தல், பள்ளிகளில் கொரோனா தடுப்பு மையங்கள் உருவாக்குதல் போன்ற பணிகளும் நடக்கின்றன.ஆனால், சில மாவட்டங்களில் உள்ள முதன்மை கல்வி அலுவலகங்கள் மற்றும் மாவட்ட, வட்டார கல்வி அலுவலகங்களில், பள்ளிகளுக்கு அங்கீகாரம் நீட்டித்தல், கூடுதல் வகுப்புகள் அனுமதித்தல், ஆசிரியர்களுக்கு இடமாறுதல் போன்ற கோப்புகளை, ரகசியமாக மேற்கொள்வதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், அரசு உதவி பெறும் பள்ளிகளில், புதிய ஆசிரியர்களுக்கு ஒப்புதல் வழங்குதல் உள்ளிட்ட பணிகளில், மும்முரம் காட்டப்படுவதாகவும், பள்ளி கல்வி துறைக்கு புகார்கள் வந்துள்ளன.சில அதிகாரிகள், தங்களுக்கு ஓய்வு பெறும் காலம் நெருங்குவதால், அதற்குள் இந்த பணிகளை முடித்து, அந்த பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களிடம் உரிய சலுகை பெற்று கொள்ள முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட தன்னிச்சையான, நிர்வாக பணிகளுக்கு ஒத்துழைக்காத ஊழியர்களுக்கு, இடமாறுதல் வழங்கப்படும் என, சில அதிகாரிகள் மிரட்டுவதாகவும், குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.இது குறித்து, அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட, வட்டார கல்வி அதிகாரிகளுக்கு, அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அரசு அறிவித்துள்ள ஊரடங்கு காலத்தில், அத்தியாவசிய பணி அல்லாத, மற்ற எந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், அவை ரத்து செய்யப்படும்; அதற்கு பொறுப்பான அதிகாரிகள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.