தன் உயிரை காப்பாற்றிய மருத்துவர்களின் பெயர்களை மகனுக்கு சூட்டிய பிரிட்டன் பிரதமர்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் உலகத் தலைவரான போரிஸ் ஜான்சன், தீவிர சிகிச்சைக்குப் பின் வீட்டிற்கு திரும்பி மெல்ல தனது இயல்பு வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார். மகிழ்ச்சி தரும் செய்தியாக அண்மையில் அவர் ஒரு மகனுக்கு தந்தையானார்.
இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தபோது கண்ணும் கருத்துமாக கவனித்த இரு மருத்துவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக அவர்களின் பெயர்களை இணைத்து தனது மகனுக்கு வில்ஃபிரெட் லாரி நிக்கோலஸ் என சூட்டியுள்ளார்.
மகனின் பெயரை போரிஸின் வருங்கால மனைவியான சைமண்ட்ஸ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் வில்ஃபிரெட் என்பது போரிஸின் தாத்தா பெயர் என்றும் லாரி என்பது சைமண்டஸின் தாத்தா பெயர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. போரிஸூக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் நிக் பிரைஸ் மற்றும் நிக் ஹார்ட் இருவரின் பெயரை இணைத்து கடைசியாக நிக்கோலஸ் என சூட்டியிருப்பதாக சைமண்ட்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.