ஹேப்பி நியூஸ்... இனி ''இ-பாஸ்'' தேவையில்லை... உள் மாவட்ட போக்குவரத்துக்கு மட்டும் தளர்வு

லாக்டவுனில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள 25 மாவட்டங்களுக்கு மட்டும் இந்த புதிய நடைமுறை பொருந்தும் எனக் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ம் முதல் லாக்டவுன் அமலில் இருந்து வருகிறது. தற்போது 3-ம் கட்ட லாக்டவுன் அமலில் உள்ள நிலையில் அது இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது. இந்த சூழலில் தமிழகத்தில் மே 31-ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
இதில் சற்று ஆறுதல் படக்கூடிய விவகாரம் என்னவென்றால் திருச்சி, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட 25 மாவட்டங்களுக்கு புதிய தளர்வுகளை அவர் அறிவித்திருப்பது தான். அதன் படி இனி அந்தந்த மாவட்டங்களுக்குள் இ-பாஸ் இல்லாமல் வாகனங்களை இயக்க தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வு பலருக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
அதேபோல் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு சென்றுவர தற்போது நடைமுறையில் உள்ள இ-பாஸ் பெறும் நடைமுறை தொடரும் என்றும், அதில் எந்த மாற்றமும் இல்லை எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். வாடகை டாக்ஸிகளை பொறுத்தவரை லாக்டவுனில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள 25 மாவட்டங்களில் மட்டும் கடும் நிபந்தனைகளுடன் இயக்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், வேளாண்மை,, வியாபாரம், உள்ளிட்ட அத்தியாவசிய பணி நிமித்தங்களுக்காக வாடகை கார்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. வாடகை டாக்ஸிகளில் தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.