சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடியாக குறைப்பு
எரிவாயு சிலிண்டர் விலை ரூ.192 குறைந்துள்ளது. தற்போது, ஒவ்வொரு வீட்டிற்கும் மானிய விலையில், ஆண்டிற்கு 12 காஸ் சிலிண்டர்கள் எண்ணெய் நிறுவனங்களால் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு மேல் கூடுதலான சிலிண்டர்கள் தேவைப்பட்டால், சந்தை விலை கொடுத்துதான் வாங்க வேண்டும்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நிய செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், சமையல் காஸ் சிலிண்டர் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன.
இந்நிலையில், கடந்த மார்ச் முதல் தொடர்ந்து 3-வது மாதமாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்துள்ளது. தற்போது தமிழகத்தில் மானியமில்லா வீட்டு எரிவாயு சிலிண்டர் விலை ரூ.192 குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.761.50-க்கு விற்பனை செய்யப்பட்ட சமையல் எரிவாயு இருந்த சிலிண்டர் விலை தற்போது ரூ.569.50 ஆக குறைந்துள்ளது. மானியமில்லாத வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை கடந்த ஏப்ரல் மாதம் ரூ.1404-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் ரூ.259.50 குறைந்து ரூ.1144.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
ஊடரங்கு காலத்தில் சமையல் சிலிண்டர் தேவை அதிகம் இருக்கும் நிலையில், கடந்த 3 மாதங்களாக எரிவாயு சிலிண்டர் விலை குறைந்து வருவது இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.