10ம் வகுப்பு, பிளஸ் 1 தனித்தேர்வர்கள் கல்வித்துறையின் மவுனத்தால் கவலை
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கு பதிவு செய்த தனித் தேர்வர்களுக்கு, தேர்ச்சி அளிப்பது குறித்து, கல்வித்துறை எந்த அறிவிப்பும் வெளியிடப்படாததால், அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
கொரோனா தொற்று பரவல் பிரச்னையால், தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் நடக்கவிருந்த, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கு, ஒரு பாடத்துக்கான தேர்வும் ரத்தாகி உள்ளது. தேர்வுக்கு பதிவு செய்த மாணவர்களுக்கு, காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், 80 சதவீத மதிப்பெண்ணும், வருகை பதிவின்படி, 20 சதவீத மதிப்பெண்ணும் வழங்கப்பட உள்ளது.இதற்கான பணிகளை, அரசு தேர்வுத்துறை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்களுக்கு, தேர்ச்சி அளிப்பது குறித்து, எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.அதனால், தனி தேர்வர்கள் கவலை அடைந்துஉள்ளனர்.
பத்தாம் வகுப்பு தனி தேர்வர்களை பொறுத்தவரை, பல வகையாக உள்ளனர். பிற மாநிலங்களில் வசித்தாலும், தங்களின் தாய் மொழி மீதான பற்றுதலால், தமிழ் வழியில் பலர் படிக்கின்றனர்.இவர்கள் படிக்கும் பள்ளிகள், தமிழக பாட திட்டத்தை பின்பற்றுகின்றன. இந்த பள்ளி மாணவர்கள், தனி தேர்வர்களாக கருதப்படுகின்றனர்.மேலும், பள்ளிகளுக்கு சென்று படிக்க வசதி இல்லாதவர்களும். பொருளாதார பிரச்னையால் நலிவடைந்த பலரும், வெளியே வேலை பார்த்தபடி,10ம் வகுப்பு தேர்வை தனி தேர்வாக எழுதுவர். எனவே, அவர்களின் வாழ்வை முன்னேற்றும் வகையில், அனைவருக்கும் தேர்ச்சி என, பள்ளி கல்வித்துறை அறிவிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
அதேபோல, பிளஸ் 1 தனி தேர்வர்களை பொறுத்தவரை, பிளஸ் 1ல் ஏற்கனவே சில பாடங்களில் தேர்ச்சி மதிப்பெண் பெற முடியாமல், 'அரியர்' வைத்திருப்பவர்களே, தனி தேர்வர்களாகபங்கேற்கின்றனர்.முதல் முயற்சியில், சில பாடங்களில் தோல்வி அடைந்தாலும், மீண்டும் படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் தேர்வு எழுத விண்ணப்பித்த அவர்களுக்கும், உரிய வழிகாட்டுதல்களை, அரசு அறிவிக்க வேண்டும் என, பெற்றோரும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.