10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உரிய ஆய்வுக்குப் பிறகு மதிப்பெண்கள்? - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, June 15, 2020

10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உரிய ஆய்வுக்குப் பிறகு மதிப்பெண்கள்?

10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உரிய ஆய்வுக்குப் பிறகு மதிப்பெண்கள்?
தமிழகத்தில் கரோனாவால் பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்கும் முறையில் கல்வித் துறை அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் ஜூன் 15 ஆம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்ட 2019 - 20-ஆம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, கரோனா தொற்று தாக்கம் அதிகரிப்பு, பொது முடக்கம் உள்ளிட்ட காரணங்களால் ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அண்மையில் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, அனைத்து மாவட்ட கல்வித் துறைக்கும் தேர்வு ரத்துக்கான அரசின் அறிவிப்பு அனுப்பப்பட்டது. அதில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும், காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீதமும், வருகைப் பதிவேடு மூலம் 20 சதவீதமும் கணக்கிட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மதிப்பெண் வழங்கும் முறையால் வரும் கல்வியாண்டு மாணவர் சேர்க்கையின்போது, பெற்றோர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கல்வியாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: ஆண்டுதோறும் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டு, அவற்றுக்கான மதிப்பெண் பட்டியல் மாவட்டக் கல்வி அலுவலகங்கள், முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு பள்ளிகள் மூலம் அனுப்பி வைக்கப்படும். மாணவர்களின் தேர்ச்சி நிலையை வைத்து பள்ளிகளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும்.

தற்போது, அரசு அறிவித்தபடி, அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வித் துறை வைத்துள்ள பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, அவற்றிலுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் எளிதாக கணக்கிட்டு, பொதுத் தேர்வு மதிப்பெண்களை வழங்க முடியும். ஆனால், தனியார் பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் பட்டியல் அந்தந்த பள்ளிகளில் வைத்திருப்பதுதான் வழக்கம். இதை கல்வித் துறை கண்காணிப்பதும், பதிவு செய்வதும் நடைமுறையில் இல்லை.

இதனால், தனியார் பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டுத் தேர்வு மதிப்பெண் நிலவரம் குறித்து அவர்கள் தரும் பட்டியலையே நம்ப வேண்டியுள்ளது. தற்போது, தனியார் பள்ளிகளிடையே தீவிர போட்டி நிலவும் சூழலில், சில பள்ளிகள் முதலிடம் பெறுவதற்காக மதிப்பெண் பட்டியலில் திருத்தம் செய்யவும் வாய்ப்புள்ளது.

தனியார் பள்ளிகளில் மாணவர்கள் வருகை முழுமையாக இருக்கும் என்பதால், அதில் குறை காண வாய்ப்பிருக்காது. அரசுப் பள்ளி மாணவர்களின் வருகைப் பதிவு சற்று குறைவாக இருக்கும் என்பதால், அவர்களுக்கு இது பாதகத்தை ஏற்படுத்தும் என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும்.

வருகைப் பதிவேடுகளுக்கு "சீல்': இதனிடையே, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், கல்வித் துறை சார்பில் அதற்கான வழிகாட்டுதல்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வரவில்லை. ஆனால், இந்த மதிப்பெண் வழங்கும் முறைக்காக, அனைத்து அரசு, தனியார் பள்ளிகளின் வருகைப் பதிவேடு பட்டியலை உடனடியாக பெற வேண்டுமென கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, விழுப்புரம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலம் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் வருகைப் பதிவேடு உடனடியாக பெறப்பட்டு, பாதுகாப்பாக "சீல்' வைக்கப்பட்டுள்ளன.

மேலும், அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களின் காலாண்டு, அரையாண்டுத் தேர்வு மதிப்பெண் பட்டியல் மட்டும் கல்வித் துறையிடம் ஏற்கெனவே தயாராக உள்ளது. ஆனால், தனியார் பள்ளிகளின் மதிப்பெண் பட்டியல் விவரம் இன்னும் பெறப்படாமல் அந்தந்த பள்ளிகளிலேயே உள்ளன.

எளிய தேர்வு அவசியம்: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் புதிய நடைமுறை, குறைபாடுகளை அதிகரிக்கவே வழியை ஏற்படுத்தும் என கல்வியாளர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். இதைக் கருத்தில் கொண்டு, தனியார் பள்ளிகளிடம் மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை உடனடியாகப் பெற வேண்டும். மதிப்பெண் தொடர்பான பெற்றோர்களின் அதிருப்தியை தவிர்க்கவும், மாணவர் சேர்க்கையை எதிர்கொள்ளவுள்ள கல்வி நிறுவனங்கள் பிரச்னையைச் சந்திப்பதை தவிர்க்கவும், இந்த புதிய நடைமுறையை மாற்றுவதுடன், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவித்து மதிப்பெண் பட்டியல் வழங்குவதையும் கைவிட வேண்டும்.

பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும்போது, பிளஸ் 1 குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி என மாணவர்களை தேர்வு செய்ய அந்த நேரங்களில் அந்தந்தப் பள்ளிகளில் எளிமையான நுழைவுத் தேர்வுகளை வைத்து, அதில் 80 சதவீதத்துக்கும் மேல் பெறுவோருக்கு குரூப் ஏ, 60 சதவீதத்துக்கும் மேல் பெறுவோருக்கு குரூப் பி, 50 சதவீதத்துக்கும் மேல் பெறுவோருக்கு குரூப் சி என முன்னுரிமை அளித்து சேர்க்கை வழங்கலாம்.

இதேபோல, தொழில் கல்வி, தொழில்நுட்பக் கல்வி போன்றவற்றுக்கும் எளிமையான ஒரு தேர்வை நடத்தி, இட ஒதுக்கீடு முறையில் சேர்க்கை வழங்குவது சரியாக அமையும் என கருத்துத் தெரிவித்தனர். கல்வித் துறை அதிகாரிகள் இதுதொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.

Post Top Ad