சென்னைப் பள்ளிகளில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இணையவழிக் கல்வி தொடக்கம் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, June 1, 2020

சென்னைப் பள்ளிகளில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இணையவழிக் கல்வி தொடக்கம்

சென்னைப் பள்ளிகளில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இணையவழிக் கல்வி தொடக்கம்
சென்னை: சென்னைப் பள்ளிகளில் 2020-2021-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு இணையவழி மூலம் கற்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்காக தனியார் பங்களிப்புடன் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 5 ஆயிரம் அறிதிறன்பேசி (ஸ்மார்ட்போன்) வழங்கப்பட்டுள்ளதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் கல்வித்துறையில் மாணவர்களின் நலன் கருதி பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது கரோனா தடுப்புக்காக பொது முடக்கம் அமலில் உள்ளதால் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வர இயலாத சூழ்நிலை உள்ளது. 2020-21-ஆம் கல்வியாண்டில் சென்னை பள்ளிகளில் பயிலும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள 9-ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களின் கற்றல் செயல்பாடு தடைபடாத வண்ணம் இணையவழி மூலம் பயிற்சி வழங்க பெருநகர சென்னை மாநகராட்சி தீர்மானித்தது.

அதை செயல்படுத்தும் வகையில், தொண்டு நிறுவனத்தின் மூலமாக 4,890 அறிதிறன்பேசிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதோடு, அதனை பெற்றோரின் மேற்பார்வையில் கையாளும் விதம் பற்றிய அறிவுரைகளும் வழங்கப்பட்டன. இணையவழி மூலம் அந்தந்த மாதத்திற்குரிய பாடங்களைப் படிக்க ஏதுவாக அமைந்துள்ளதால் மாணவர்களும் பெற்றோர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

பத்தாம் வகுப்பு-பிளஸ் 2 அட்டவணை: இதன் தொடர்ச்சியாக, மாணவ, மாணவிகளின் நலன் கருதி, ஜூன் மாதம் 1-ஆம் தேதி திங்கள்கிழமை முதல் 2020-21-ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இணையதளத்தின் வாயிலாக பாடவாரியாக கால அட்டவணை தயார் செய்யப்பட்டது.

இதையடுத்து ஒவ்வொரு நாளும் அந்தந்தப் பள்ளிகளில் பாடம் போதிக்கும் ஆசிரியரைக் கொண்டு, முதல் கட்டமாக 1 மாதத்துக்கான பாடத்திட்டத்தை தலைமையாசிரியர் மூலமாக ஒவ்வொரு ஆசிரியருக்கும் நாள் வாரியாக வழங்கப்பட்டுள்ளது.

மடிக்கணினி மூலம்...: அவ்வாறு வழங்கப்பட்ட பாடத்திட்டத்தை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகள் கல்வித்துறையின் உதவிக் கல்வி அலுவலர் வாயிலாக தினமும் மேற்பார்வையிடப்படுகின்றன. பிளஸ் 2 வகுப்பு பயிலும் 5,220 மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசு வழங்கிய மடிக்கணினியைக் கொண்டு கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது பத்தாம் வகுப்பு பயிலும் 5,000 மாணவ, மாணவிகளுக்கு சென்னை மாநகராட்சி கல்வித்துறையால் அறிதிறன்பேசிகள் இலவசமாக வழங்கப்பட்டு, கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பொதுத்தேர்வை எதிர்கொள்ள...: மேலும் 2019-2020-ஆம் கல்வியாண்டில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஜூன் 15-இல் தொடங்கும் பொதுத்தேர்வை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்ள, 3,500 மாணவர்களின் கோரிக்கைக்கு இணங்க பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையால், அவரவர் பயன்படுத்தும் சேவை வழங்குநருக்கு (Service Provider) ஏற்ப, இலவச இணையதள இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது என ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Post Top Ad