வரலாறு காணாத வகையில் விலை உயர்வு; ரூ37 ஆயிரத்தை நெருங்கியது தங்கம்
தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் நேற்று வரை சவரனுக்கு ரூ7000 அதிகரித்துள்ளது. சவரன் ரூ37 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் கடந்த மாதம் 24ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அன்று முதல் நகைக்கடைகள் மூடப்பட்டன. இருப்பினும், விலை மட்டும் உயர்ந்து கொண்டே வந்தது. முதல் ஊரடங்கு மார்ச் 24ம் தேதி பிறப்பிக்கும் முன்பாக, முந்தைய நாளில் தமிழகத்தில் ஒரு கிராம் தங்கம் ரூ3,952க்கும், சவரன் ரூ31,616க்கும் விற்கப்பட்டது. அதன் பிறகு சர்வதேச சந்தையில் ஏற்பட்ட தாக்கத்தால், உள்நாட்டு சந்தையிலும் தங்கம் விலை அதிகரித்து கொண்டே போனது.
கடந்த சனிக்கிழமை ஒரு கிராம் தங்கம் ரூ4,608க்கும், சவரன் ரூ36,864க்கும் விற்கப்பட்டது. ஞாயிறு விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை கிராமுக்கு ரூ2 அதிகரித்து ஒரு கிராம் ரூ4,610க்கும், சவரனுக்கு ரூ16 அதிகரித்து ஒரு சவரன் ரூ36,880க்கும் விற்கப்பட்டது. காலையில் சவரனுக்கு ரூ168 அதிகரித்து ஒரு சவரன் ரூ37,032க்கு விற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து நேற்று வரை சவரனுக்கு ரூ5,264 அதிகரித்துள்ளது. அதே போல கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் நேற்று வரை சவரனுக்கு ரூ7000 வரை விலை அதிகரித்துள்ளது. ஜனவரி 1ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ3,735க்கும், சவரன் ரூ29,880க்கும் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது:
அமெரிக்காவில் வங்கிகளை நிர்வகிக்கும் பெடரல் கூட்டமைப்பின் கூட்டம் இன்றும், நாளையும் நடக்கிறது. அந்த கூட்டத்தில் வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை மாற்றி அமைப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அந்த விவாதத்தில் வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படவில்லை எனில், இன்னும் தங்கம் விலை உயரும். ஒரு வேளை வட்டி விகிதம் அதிகரித்தால், தங்கம் விலை குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தங்கம் விலை மேலும் உயரும். இவ்வாறு அவர் கூறினார்.
காரணம் இதுதானாம் சர்வதேச அளவில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருவது, தங்கம் இறக்குமதி குறைந்தது, விற்பனை குறைவு போன்ற காரணங்களால் தங்கம் விலை அதிகரித்து உள்ளதாக தங்க நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். பீதியில் பெற்றோர் தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள நகைக்கடைகள் தற்போது இயங்கி வருகின்றன.
கொரோனாவால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் அதிகளவில் நடைபெறவில்ைல. நிச்சயிக்கப்பட்ட திருமணம் தேதியை கூட தள்ளி வைத்துள்ளனர். இதனால், திறந்திருக்கும் நகைக் கடைகளில் வியாபாரம் பெயரளவுக்குதான் இருந்து வருகிறது. கடைகள் முழுமையாக இயங்காத நேரத்திலும் கூட நகை விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பது, திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை வைத்துள்ள பெற்றோர்களின் வயிற்றில் புளியை கரைக்கிறது