பள்ளிக்கல்வித்துறை நிபுணர் குழுவை விரிவுபடுத்த ஆசிரியர் கழகம் கோரிக்கை!
கொரோனா கொள்ளை நோய்த் தொற்றின் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் 17.03.2020 முதல் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. மூடப்பட்டுள்ள பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பதைப் பற்றியும் தெளிவான முடிவெடுக்க முடியாத நிலையில் இன்று நம்மை கொரோனா ஆழ்த்தி இருக்கிறது.
இந்நிலையில் கொரோனா தொற்றால் ஏற்படுத்தப்பட்டுள்ள சவால்களை சமாளிக்கவும் , தமிழக பள்ளிக்கல்வித்துறையில் கற்றல் - கற்பித்தல் பணியில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை எவ்வாறு சரிசெய்வது , பாடத்திட்ட சுமைகளை எவ்வாறு குறைப்பது பற்றியும் ஆராய்ந்து அரசுக்குத் தெளிவுரை வழங்குவதற்காக பார்வையில் காட்டப்பட்டுள்ள இரண்டு அரசாணைகளின் மூலமாக பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதை எங்கள் சங்கம் வரவேற்கிறது.
ஆனால் , அதே சமயத்தில் அக்குழு ஒரு முழுமையான குழுவாக அமைக்கப்படவில்லை என்பதையும் , அரைகுறை குழுவாகவே அமைக்கப்பட்டுள்ளது என்பதையும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவருகிறோம். அக்குழுவில் பள்ளிக்கல்வித்துறையின் உயர் அதிகாரிகளும் , மத்திய பள்ளிப் பாடத்திட்ட சிபிஎஸ்இ - பள்ளி நிர்வாகிகளும் - நிரம்பி வழியும் குழுவாக அது அமைக்கப்பட்டுள்ளது.
அக்குழுவால் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் ஒரு சார்புத் தன்மை உடையதாகவும் , பாரபட்சமான முடிவுகளாகவே அமைந்துவிடுமோ என்ற கவலை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அக்குழுவில் , தமிழகத்தில் உள்ள சிறப்புமிக்க கல்வியாளர்களில் யாரும் சேர்க்கப்படவில்லை. ஆசிரியர் சங்கங்களின் பிரநிதிநிதிகள் யாரும் இடம்பெறவில்லை. மாணவர் சங்கங்களின் பிரதிநிதிகள் , பெற்றோர்களின் பிரதிநிதிகள் யாரும் அக்குழுவில் இணைக்கப்படவில்லை. ஆகவே , இக்குறைபாடுகளை எல்லாம் சரிசெய்து , அனைத்துத் தரப்பினருக்கும் அக்குழுவில் இடமளிக்கும் வகையில் அக்குழுவை மேலும் விரிவுபடுத்தி அமைத்திட வேண்டுகிறோம். எங்கள் சங்கத்திற்கும் அக்குழுவில் இடம் அளித்து எங்களுடைய கருத்துக்களையும் கேட்டறியுமாறு தங்களை கனிவுடன் வேண்டுகிறோம். அக்குழுவிற்கு அளிக்கப்பட்டுள்ள கால அவகாசத்தையும் மேலும் நீட்டிப்பு செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.