கொரோனா இ-பாஸ் : அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் கைது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர் இ.பி.காலனியைச் சேர்ந்தவர் கோயில்பிள்ளை மகன் அமல்ராஜ் (வயது 47). இவர் ஓட்டப்பிடாரம் அருகே வீரபாண்டியபுரத்தில் உள்ள தமிழ் பாப்திஸ்து தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால், தமிழகத்தில் மண்டலங்களுக்கு உள்ளேயே பஸ்கள் இயக்கப்படுகின்றன. திருமணம், மருத்துவம், இறப்பு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக, சொந்த வாகனங்களில் மண்டலங்களைக் கடந்து செல்வதற்கு, இ-பாஸ் பெற அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் அமல்ராஜ், மருத்துவ அவசரம் என்று தனது பெயரில் இ-பாஸ் எடுத்து, கடந்த 5-ந்தேதி தன்னுடைய உறவினர் ஒருவரை கோவில்பட்டியில் இருந்து சென்னை ஸ்ரீபெரும்புதூருக்கு தனது காரில் அழைத்து சென்று விட்டு வந்தார்.
தொடர்ந்து அமல்ராஜ் மற்றொரு முறையும் மருத்துவ அவசரம் என்று தனது பெயரில் இ-பாஸ் பெற்று, கோவில்பட்டியில் இருந்து சென்னை ஆவடிக்கு சென்றார். பின்னர் அவர் அங்குள்ள தன்னுடைய உறவினரை காரில் அழைத்து வந்து, கயத்தாறில் இறக்கி விட்டு வந்தார்.
அமல்ராஜ் அடுத்தடுத்து இரு முறை மருத்துவ அவசரம் என்று இ-பாஸ் பெற்றதால், இதுதொடர்பாக வருவாய் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அமல்ராஜ், இருமுறையும் தவறான தகவல்களை அளித்து, இ-பாஸ் பெற்று தன்னுடைய உறவினர்களை சென்னைக்கு காரில் அழைத்து சென்றதும், பின்னர் அங்கிருந்து மற்ற உறவினர்களை காரில் திருப்பி அழைத்து வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து பாண்டவர்மங்கலம் கிராம நிர்வாக அலுவலர் சுப்புராஜ் அளித்த புகாரின்பேரில், கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்குப்பதிவு செய்து அமல்ராஜை கைது செய்தார். அமல்ராஜின் காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அமல்ராஜை கோவில்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் போலீஸ் பாதுகாப்புடன் தனிமைப்படுத்தி, அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. கோவில்பட்டியில் தவறான தகவல்களை அளித்து இருமுறை இ-பாஸ் பெற்ற தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.