இனிமேல் பணம் இல்லை; ஓராண்டுக்கு எந்த திட்டமும் அறிவிக்கப்படாது: மத்திய நிதியமைச்சகம் திட்டவட்டம்!
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 3-ம் தேதி வரையும் பின்னர் மே 17-ம் தேதி வரையிலும் ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 4ம் கட்டமாக மே 31-ம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டது.
பின்னர் ஜூன் மாதத்திலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள போதிலும் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கரோனாவை தடுக்கவும், முன்னெச்சரிக்கை மற்றும் சிகிச்சை பணிகளுக்காக மத்திய அரசு தொடர்ந்து செலவிட்டு வருகிறது. அதுபோலவே ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை குறைக்கும் வகையில் பல திட்டங்களையும் மத்திய அரசு அறிவித்து வருகிறது.
இந்தநிலையில் மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்தியாவில் கரோனா வைரஸ் காரணமாக பெரும்பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ரூ.20 லட்சம் கோடி அளவிற்கு ஊக்கச் சலுகை திட்டத்தினை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் செலவினங்களை குறைக்கும் நடவடிக்கையாக இனி புதிய திட்டங்கள் இந்த நிதியாண்டு முழுவதும் அறிவிக்கப்படாது.
அதேசமயம் பிரதமரின் காரிப் கல்யாண் தொகுப்பு மற்றும் ஆத்மனிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகளுக்கு மட்டுமே செலவு அனுமதிக்கப்படும். இவற்றை தவிர இந்த நிதியாண்டில் வேறு எந்த திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்படாது. புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்க கோரி நிதி அமைச்சகத்திற்கு அனுப்புவதை நிறுத்துமாறு அனைத்து துறை அமைச்சகங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.