அக்., வரை பள்ளிகள் திறப்பில்லை: தனியார் பள்ளி நிர்வாகிகள் கருத்து
'பள்ளிகளை அக்டோபர் வரை திறக்க வாய்ப்பு இல்லை' என தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த ராம்கோ நிறுவனத்தின் உறுப்பு நிறுவனமான 'பேரன்ட் சர்க்கிள்' நிறுவனம் பள்ளி முதல்வர்களை ஒருங்கிணைத்து ஆன்லைன் வாயிலாக ஆலோசனை மற்றும் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தியது. இதில் சென்னை, மும்பை மற்றும் டில்லியில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் பங்கேற்று பேசினர்.
அவர்களின் கருத்துக்கள் வருமாறு:
கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில் பள்ளிகளை தற்போதுதிறக்க முடியாத சூழல் உள்ளது. தென்மேற்கு பருவமழையால் தொற்று பரவல் அதிகரிக்கும்.வகுப்புகளில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது சவாலான பணி. குறிப்பாக 'பிளே ஸ்கூல், ப்ரீ ஸ்கூல், பிரைமரி ஸ்கூல்' என இரண்டரை வயது முதல் 10 வயது வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்த முடியாது.
பாடதிட்டங்கள் பாடங்களின் அளவுகள் குறைக்கப்பட வேண்டும். கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் ஏற்படுத்த வேண்டும்.கொரோனாவுக்கு பிந்தைய நிலைக்கான விதிகள் வகுக்கப்பட வேண்டும். கல்வி ஆண்டின் காலத்தை மாற்றி அமைக்க வேண்டும். இதுபோன்ற காரணங்களால் அக்டோபர் வரை பள்ளிகளை திறப்பது சாத்தியம் இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.