கற்றலில் புதிய வழிமுறைகள் - யுனெஸ்கோ அறிக்கை வெளியீடு.
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மாணவர்களின் கற்றலில் பின்னடைவு ஏற்படும் என்பதுடன் அனைவரும் அணுகும் வகையில் புதிய கல்வி முறைகளை உருவாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என 'யுனெஸ்கோ' கூறியுள்ளது.
இதுகுறித்து யுனெஸ்கோவின் அறிக்கை:
பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக உறுதியற்ற நிலை நீடிக்கிறது. பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டால் போதிய சமூக விலகலை அனைத்து நாடுகளும் முழுமையாகபின்பற்ற இயலாது.இந்த கல்வியாண்டில் மாணவர்களின் கற்றலில் கணிசமான பின்னடைவு ஏற்படும் என தெரிகிறது.
பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் நிலையில் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளில் 17 சதவீதத்தினர் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளனர். அவர்களில் 22 சதவீதத்தினர் வகுப்பு நேரத்தை அதிகரிக்கவும் 68 சதவீதத்தினர் வகுப்புகளை தொடங்கும் முன் மாணவர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சிகளை அளிக்கவும் முடிவுசெய்துள்ளனர்.ஆனால் இது கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு மிக கடினமானதாக இருக்கும். கொரோனா வைரஸ் தாக்குதலால் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளுக்கு தொழில் நுட்ப ரீதியில் மட்டுமே தீர்வு காண இயலாது.
ஏனெனில் மிகச்சில நாடுகளில் மட்டுமே 'ஆன்லைன்' மூலம் வகுப்புகள் நடத்துவதற்கான உட்கட்டமைப்புகள் உள்ளன. பெரும்பான்மையான நாடுகளில் நேரடி கற்றல் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது.இதற்கு தீர்வாக கற்றலில் புதிய வழிமுறைகளை உருவாக்குவது அவசியமாக உள்ளது.அத்துடன் அனைவரும் எளிதில் அணுகும் வகையிலான கல்வி முறைகளை அனைத்து நாடுகளும்உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.