மத்திய அரசின் 'இ-சஞ்சீவினி' திட்டம்; 'ஆன்லைன்' மூலம் மருத்துவ ஆலோசனை
திருப்பூர்;ஊரடங்கு நேரத்தில், நோய் பாதிப்புக்கு உள்ளாகும் மக்கள், 'இ-சஞ்சீவினி' திட்டத்தின் மூலம், 'ஆன்லைன்' வாயிலாக இலவச மருத்துவ ஆலோசனை பெற்று பயனடைகின்றனர்.வீட்டில் இருந்தே, பாதிப்புகளை தெரிவித்து, மருத்துவ சிகிச்சை பெற, மத்திய அரசு வழிவகை செய்துள்ளது. 'இ-சஞ்சீவினி' என்ற திட்டத்தின் மூலமாக, 'ஆன்லைன்'ல் தங்களது பாதிப்பு விவரத்தை பதிவு செய்து, டாக்டரிடம் மருத்துவ ஆலோசனை பெறுகின்றனர்.சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:இத்திட்டத்தில், தினமும், காலை, 10:00முதல், மாலை, 3:00 மணி வரை, மருத்துவ ஆலோசனை பெறலாம்.நோயாளிகள்,www.esanjeevani.opd என்ற இணையதள முகவரிக்கு சென்று, தங்களது மொபைல் போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். வரப்பெறும் கடவுச்சொல்லை 'டைப்' செய்து, 'இ-சஞ்சீவினி' பக்கத்துக்குள் செல்லலாம்.முழு விவரம், முகவரியை பதிவு செய்து, 'கால் நவ்' என்ற பட்டனை 'கிளிக்' செய்து, இணைப்பில் உள்ள டாக்டர்களிடம் ஆலோசனை பெறலாம். டாக்டர்கள், பதிவு செய்த மொபைல் போன் எண்ணுக்கு, எடுக்க வேண்டிய மருந்து, மாத்திரை விவரத்தை அனுப்பி வைக்கின்றனர். அதனை, மருந்தகங்களில் வாங்கி பயன்படுத்தலாம்.தமிழகத்திலேயே, திருப்பூர் மாவட்டத்தில், இந்த சேவையை அதிகப்படியான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், இந்த சேவையால் குணமடைகின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.