தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்க அனுமதி கோரி வழக்கு: தமிழக அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு
தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்க கூடாது என்ற அரசாணைக்கு தடை கோரியும், கல்வி கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்க கோரியும் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் கே.பழனியப்பன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. பள்ளி மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலித்தால்தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியும். கடந்த சில மாதங்களாக பள்ளிகளில் பணியாற்றும் அனைவருக்கும் தனியார் பள்ளிகள் சம்பளம் வழங்கி வருகிறது.
தற்போது கல்வி கட்டணம் வசூலிக்க அனுமதித்தால்தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியும். எனவே தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அந்த அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சங்கம் சார்பாக வக்கீல் விஜயானந்த் ஆஜராகி, தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும், மற்ற ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுக்க வேண்டும். இதற்காக தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் இருந்து கல்விக் கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும். எனவே, தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் அடுத்த வாரம் தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.