CA Exam - சூழ்நிலைக்கேற்ப தேர்வு மையத்தை மாற்றிக்கொள்ள வாய்ப்பு.
நாட்டில், சி.ஏ., எனப்படும் பட்டய கணக்காளர் தேர்வுகள், ஜூலை, 29 முதல், ஆக., 16 வரை நடத்தப்படும் என, இந்திய பட்டய கணக்காளர் பயிற்சி மையம் அறிவித்துள்ளது.
மனு தாக்கல்
இத்தேர்வுகள், மே, மாதம் நடைபெற இருந்த நிலையில், அதிலிருந்து விலகிக்கொள்வதாக கூறிய தேர்வர் ஒருவர், மீண்டும் தேர்வெழுதும் வாய்ப்பு கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனு, நீதிபதி, ஏ.எம்.கான்வில்கர் தலைமையில், நீதிபதிகள், தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சீவ் கன்னா ஆகியோர் கொண்ட அமர்வு முன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:
கொரோனா வைரசின் தாக்கம் உள்ள நிலையில், தேர்வு நடத்துவதில், பட்டய கணக்காளர் பயிற்சி மையம், சூழ்நிலைக்கேற்ப நடந்து கொள்ள வேண்டும். தேர்வில் இருந்து விலகுவதாக அறிவிக்காத ஒருவர், வைரஸ் பரவல் பிரச்னையால், தேர்வில் பங்கேற்ற முடியாத நிலையில், அவருக்கு மாற்று வாய்ப்பு வழங்க வேண்டும்.
விசாரணை
இதுபோன்ற நேரத்தில், தேர்வுக்கு ஒரு வாரம் முன்பு வரை, தேர்வு மையத்தை மாற்றிக்கொள்வதற்கான வாய்ப்பை, தேர்வில் பங்கேற்போருக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மனுதாரர் பிரச்னை தொடர்பாக, பட்டய கணக்காளர் பயிற்சி மையத்தின் கருத்துகளை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விசாரணை, ஜூலை, 2ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது