விடுபட்ட மாணவர்களுக்கான தேர்வை நடத்தி முடித்த பின்னரே,பிளஸ் 2, 'ரிசல்ட்' - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, July 2, 2020

விடுபட்ட மாணவர்களுக்கான தேர்வை நடத்தி முடித்த பின்னரே,பிளஸ் 2, 'ரிசல்ட்'

விடுபட்ட மாணவர்களுக்கான தேர்வை நடத்தி முடித்த பின்னரே,பிளஸ் 2, 'ரிசல்ட்'
'தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு, இப்போதைக்கு இல்லை' என, திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளிகள் திறப்பு குறித்து, எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், தொற்று பரவல் குறைந்த பின், மருத்துவ நிபுணர்கள் மற்றும் முதல்வருடன் கலந்து ஆலோசித்த பிறகே, இவ்விஷயத்தில் முடிவெடுக்கப்படும் என்றும், பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வுகள், மார்ச், 24ல் முடிவடைந்தன. இந்த தேர்வை, 8.5 லட்சம் பேர் எழுதினர். கொரோனா பரவலை தடுக்க, மார்ச், 24ல், திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், அன்று நடந்த தேர்வில் மட்டும், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கவில்லை.ஆனாலும், மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி, மே, 27ல் துவங்கியது; ஜூன் இரண்டாவது வாரத்தில் விடைத்தாள்கள் திருத்தம் முடிந்தது.

'ரிசல்ட்' தயார்

இதையடுத்து, பாடவாரியாக மாணவர்களின் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, தேர்வு மையம் வாரியாக, இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மாநில அளவிலும், மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், தேர்வு முடிவை வெளியிடுவதற்கான ஆயத்த பணிகள் துவங்கின. வரும், 6ம் தேதி தேர்வு முடிவை வெளியிடலாம் என, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில், அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டது.'மார்ச், 24ம் தேதி தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு, அவர்கள் தேர்வு எழுதிய பாடங்களுக்கு மட்டும், முடிவுகள் வெளியிடலாம். மற்ற மாணவர்களுக்கு, அனைத்து பாடங்களுக்கும் முடிவை அறிவிக்கலாம்' என, தேர்வுத் துறை அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்திருந்தனர். ஆனால்,அதை ஏற்க, பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மறுத்து விட்டார். விடுபட்ட மாணவர்களுக்கான தேர்வை நடத்தி முடித்த பின்னரே,பிளஸ் 2, 'ரிசல்ட்' வெளியிடப்படும் என, திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பேட்டி

இது தொடர்பாக, ஈரோடு மாவட்டம், நம்பியூரில், அவர் அளித்தபேட்டி:'ஆன்லைன்' வகுப்பு குறித்து, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. நீதிபதிகள், துறை ரீதியாக சில விளக்கங்கள் கேட்டுள்ளனர். நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்கிறதோ, அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும்.பிளஸ் 2 தேர்வு முடிவுகளை பொறுத்தவரை, சில சிக்கல்கள் உள்ளன. மார்ச், 24ம் தேதி நடந்த பாடத் தேர்வில், 34 ஆயிரத்து, 682 பேர் பங்கேற்கவில்லை. அவர்களில் தற்போது, 718 பேர் மட்டுமே, தேர்வு எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர்.இவர்களுக்கு, எப்போது தேர்வு நடத்தலாம் என்பது குறித்து, முதல்வருடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும். அதன்பின் தான், தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும்.

திறப்பு எப்போது?

தமிழகத்தில், தற்போதைய கொரோனா பரவல் சூழல், நமக்கு சாதகமாக இல்லை. பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பதை, நம்மால் யோசிக்க இயலாது. இயல்பு நிலை திரும்பிய பின், மருத்துவ குழு, வருவாய் துறை, பள்ளி கல்வித் துறையினர் ஆலோசித்து, முதல்வர் தலைமையிலான கமிட்டியில் முடிவு செய்யப்பட்டு, பள்ளி திறப்பு குறித்து, முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

பெற்றோர் அதிருப்தி

பிளஸ் 2 தேர்வை, 8.5 லட்சம் பேர் எழுதிய நிலையில், ஒரு பாடத்தில் மட்டும் தேர்வு எழுதாத மாணவர்களுக்காக, ஒட்டு மொத்தமாக முடிவு வெளியீட்டை நிறுத்தி வைப்பதா என,பெற்றோரும், ஆசிரியர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.

இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:

மாணவர்கள் எந்தெந்த பாடங்களுக்கு தேர்வு எழுதியுள்ளார்களோ, அதற்கு மட்டும் முடிவை அறிவிப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. முடிவை விரைவாக அறிவித்தால், மாணவர்கள் தங்கள் மதிப்பெண்ணை தெரிந்து, அதன் அடிப்படையில், உயர் கல்வியில் சேர்வது குறித்து, முடிவு எடுக்க அவகாசம் கிடைக்கும்.மாறாக, தேர்வு முடிவை தாமதப்படுத்தினால், அவசர அவசரமாக உயர் கல்வி குறித்து முடிவு எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Post Top Ad