ஒத்திவைக்கப்பட்ட பட்டய கணக்காளர் தேர்வு ரத்து இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் அறிவிப்பு

ஒத்திவைக்கப்பட்ட பட்டய கணக்காளர் தேர்வு ரத்து இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் அறிவிப்பு

ஒத்திவைக்கப்பட்டு இருந்த மே மாத பட்டய கணக்காளர் தேர்வு ரத்து செய்யப்படுவதாக இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் அறிவித்துள்ளது.

பட்டய கணக்காளர் தேர்வு (சி.ஏ.) ஒவ்வொரு ஆண்டும் மே மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான மே மாத பட்டய கணக்காளர் தேர்வு கொரோனா ஊரடங்கு காரணமாக நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. அதற்கான தேர்வு எப்போது நடைபெறும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாக இந்தியாவின் பட்டய கணக்காளர்கள் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

இதுகுறித்து இந்தியாவின் பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் கூடுதல் செயலாளர் (தேர்வு) எஸ்.கே.கார்க் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா நோய்த்தொற்றின் தீவிரம் ஜூன் மாதத்தின் பிற்பகுதியில் இருந்து குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மீண்டும் அதிகமாகிவிட்டது. அதேபோல், மத்திய உள்துறை அமைச்சகம், ஊரடங்கு வழிகாட்டுதல்களை ஜூலை 31-ந்தேதி வரை நீட்டித்தது. தேர்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்த அந்தந்த மாநிலங்களின் பள்ளி, கல்வி நிறுவனங்களில் தேர்வுகள் நடத்துவதற்கு அவர்களால் வளாகத்தை வழங்க முடியவில்லை.

இந்த காரணங்களாலும், தேர்வு எழுத இருந்த மாணவர்களின் நலன் மற்றும் அவர்களுடைய நல்வாழ்வை உறுதிசெய்யும் வகையிலும் 2020-ம் ஆண்டு மே மாதம் நடத்தப்பட இருந்த பட்டய கணக்காளர் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. இந்த தேர்வை வருகிற நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் தேர்வுகளுடன் ஒன்றிணைக்கவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இதுதொடர்பான முறையான அறிவிப்பு www.ic-ai.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive