10 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 5,248 பேருக்கு வரவில்லை ஏன்?… விளக்கம் அளித்துள்ளது அரசு தேர்வுகள் இயக்ககம்!!
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஆக.10) வெளியானது. இதில் 100% மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10 ஆம் வகுப்பு தேர்வுக்கு பதிவு செய்திருந்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் 5,248 பேருக்கு தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை என கூறப்பட்டது.
இதுத்தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கம் அளித்துள்ளது. அதில், “5,248 மாணவர்களில் 231 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத பதிவு செய்த பின் இயற்கை மரணமடைந்து விட்டனர். மாற்றுச்சான்றிதழ் பெற்று பள்ளியை விட்டு 658 மாணவர்கள் இடையிலேயே நின்று விட்டனர். காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் மற்றும் பள்ளிகளுக்கு 4,359 மாணவர்கள் முழுமையாக வரவில்லை” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே 10 ஆம் வகுப்பு தேர்வில் 4,71,759 மாணவர்களும் 4,68,070 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளதன் மூலம் 9,39,829 பேர் தேர்ச்சி பெற்றதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் 10ம் வகுப்பு தேர்வு எழுதுவதற்காக பதிவு செய்த மாற்றுத்திறனாளிகள் 6,235 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.