10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியிட்டதில் குளறுபடி: விரிவான விசாரணை நடத்த பள்ளிக் கல்வித்துறை ஆணையர் உத்தரவு.!
10-ம் வகுப்பு தேர்வு முடிவு குளறுபடி தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் 27ம் தேதி தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் முக்கியமான தேர்வு என்பதால் பத்தாம் வகுப்பு தேர்வு நடத்தியே தீர வேண்டும் என்று தமிழக அரசு உறுதியாக இருந்தது. ஆனால், கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அனைவரும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கல்வித்துறை, மாணவர்களின் வருகை, அரையாண்டு, காலாண்டு தேர்வின் அடிப்படையில் மதிப்பெண் நிர்ணயித்து பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவித்தது.
இதற்கிடையே, நேற்று முன்தினம் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை வெளியிட்டது. அதில், ‘‘பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் உள்ள 12,690 பள்ளிகளில், 9 லட்சத்து 39 ஆயிரத்து 829 மாணவ மாணவியர் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். இவர்களில் மாணவியர் 4 லட்சத்து 68 ஆயிரத்து 70 பேர், மாணவர்கள் 4 லட்சத்து 71 ஆயிரத்து 759 பேர். மொத்த தேர்ச்சிவீதம் 100 சதவீதம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், தேர்வுத்துறையில் குறிப்பிட்டு இருந்த தேர்ச்சி அடைந்த மாணவர்களின் எண்ணிக்கைக்கும், தேர்வுக்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கைக்கும் பெரிய எண்ணிக்கையில் அதாவது 5,177 மாணவர்களின் பெயரையே காணவில்லை. ஆல் பாஸ் என் அறிவித்துவிட்டு 5 ஆயிரம் பேரின் முடிவுகள் வெளியாகததால் மாணவர்கள், பெற்றோர், பள்ளி நிர்வாகங்கள் குழப்பம் அடைந்தன. இது குறித்து பல்வேறு தரப்பில் இருந்தும் கேள்விகள் எழுந்தது. இருப்பினும், பல்வேறு விளக்ககங்களை தேர்வு வாரியம் அளித்தது.
இந்நிலையில், எப்படி பள்ளிக்கு வராத இடைநின்ற மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் தயாரித்தது எப்படி? என்பது குறித்தும் முடிவுகள் வெளியிட்டதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் குறித்தும் விரிவான விசாரணை நடத்த பள்ளிக் கல்வித்துறை ஆணையர் சிபி தாமஸ் வைத்தியன் உத்தரவிட்டுள்ளார். அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அனைவரது மனதிலும் சந்தேசகம் எழுந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது