உயர் கல்வித்துறையின் சுற்றறிக்கையால் ஆசிரியர்களிடையே குழப்பம்!
அரசு கலைக் கல்லூரிகளின் பாடவேளை நேரம் ஒரே சுழற்சியாக மாற்றம் செய்யப்படுவதாக வெளியிடப்பட்ட உயர் கல்வித்துறையின் சுற்றறிக்கையால் ஆசிரியர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசின் உயர் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ், தமிழகம் முழுவதும் 109 அரசு கலைக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பல கல்லூரிகளில் இரு சுழற்சி வகுப்புகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. சில கல்லூரிகளில் ஒற்றைச் சுழற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அனைத்துக் கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான பாடவேளை நேரத்தைப் பின்பற்றும் வகையில், 2006-ம் ஆண்டுக்கு முன்னர் இருந்த நடைமுறையின்படி, வகுப்புகள் நடத்த உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் இந்தப் பரிந்துரையை ஏற்று, உயர் கல்வித்துறை அரசாணை (எண். 76) வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மேட்டுப்பாளையம், வால்பாறை, கூடலூர், காங்கயம், அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 50 அரசு கலைக் கல்லூரிகளின் முதல்வர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
“காலை 9.30 மணி முதல் 4.30 மணி வரை வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், 11.30 மணி முதல் 12.30 மணி வரையிலும் உணவு இடைவேளைக்குப் பிறகு, மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரையிலும் 2.30 மணி முதல் 3.30 மணி வரையிலும், 3.30 மணி முதல் 4.30 மணி வரையிலும் வகுப்புகள் நடைபெறும்” என்று 7 மணி நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர்களிடையே குழப்பம்
2006-ம் ஆண்டுக்கு முன்னர் காலை 10 மணிக்கு வகுப்புகள் தொடங்கி, 4 மணிக்கு வகுப்புகள் முடிவடைந்தன. உணவு இடைவேளையுடன் சேர்த்து, 6 மணி நேரம் வரை வகுப்புகள் நடைபெற்ற நிலையில், தற்போது 7 மணி நேர வகுப்புகளுக்கு, காலை 9.30 மணி மாலை 4.30 மணி வரை என உணவு இடைவேளையுடன் சேர்த்து 7 மணி நேரம், வேலை நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது, கல்லூரி ஆசிரியர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் த.வீரமணி கூறியதாவது:
''முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 50 அரசு கலைக் கல்லூரிகளில் பாடவேளைகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இம்முறையை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. உதாரணமாகச் சில கல்லூரிகளில் இரண்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
காலை 8.45-9.45, 9.45-10.45, 10.45-11.45, 11.45-12.45, 12.45-1.45 என 5 மணி நேரம் முதல் சுழற்சியிலும், 1.45-2.45, 2.45-3.45, 3.45-4.45, 4.45-5.45, 5.45-6.45 என 5 மணி நேரம் இரண்டாவது சுழற்சியிலும் என இரு பிரிவுகளாகப் பிரித்து வகுப்புகள் நடத்தப்படுகின்றன. சில பாடப்பிரிவுகள் இரு சுழற்சிகளிலும் நடத்தப்படுகின்றன. சில பாடப்பிரிவுகள் முதல் சுழற்சியிலும், சில பாடப்பிரிவுகள் இரண்டாம் சுழற்சியிலும் உள்ளன.
த.வீரமணி
ஏதேனும் ஒரு சுழற்சியில் உள்ள பாடப்பிரிவுகளை மட்டும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்துவது என்றால், ஒரே கல்லூரியில் 3 விதமான பாடவேளைகளைப் பின்பற்றுவது சாத்தியமாகுமா?. இரு சுழற்சிகளையும், ஒரே சுழற்சியாக மாற்றுவது என்றால், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பக் கூடுதலாக வகுப்பறைகள், அதற்கேற்பக் கூடுதல் ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள். மொழிப்பாட வகுப்புகளை நடத்துவதற்கும் கூடுதலாக ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள்.
எனவே அரசுக் கல்லூரிகளில் பாடவேளை நேரத்தை ஒரே சுழற்சியாக மாற்றுவதற்கு, முதலில் அதற்கேற்ற கட்டமைப்புகளை ஏற்படுத்திவிட்டு, இம்முறையை அமல்படுத்த வேண்டும். இதை வலியுறுத்தி ஏற்கெனவே தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம் உயர் கல்வித்துறைக்குக் கடிதம் கொடுத்துள்ளது''.
இவ்வாறு வீரமணி கூறினார்.