நல்லாசிரியர் விண்ணப்பித்தோருக்கு சோதனை
'தமிழகத்தில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் போதே போலீஸ் நன்னடத்தை சான்று இணைக்க வேண்டும்' என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாநில அளவில் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க ஆக., 14 கடைசி நாள். தற்போது மாவட்ட அளவில் சி.இ.ஓ.,க்கள் தலைமையில் நேர்காணல் நடக்கிறது. மாவட்ட வாரியாக விண்ணப்பித்தோர் எண்ணிக்கை குறைந்துவிட்டன. ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்றவர்களை பரிசீலிக்க கூடாது, அரசியல் சிபாரிசுகள் போன்ற காரணங்களால் விண்ணப்பித்தாலும் பலன் இருக்காது என தகுதியான ஆசிரியர்கள் தயங்குவதும் ஒரு காரணம்.
இந்தாண்டு விண்ணப்பிக்கும் போதே போலீஸ் நற்சான்று வேண்டும் என கூறியதால் சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட ஆசிரியர்கள் ஆன்லைனிலும், நேரிலும் சென்று விண்ணப்பித்து சான்று பெற படாத பாடுபடுகின்றனர். சில ஸ்டேஷன்களில் 'கப்பம்' கட்டியுள்ளனர்.முந்தைய ஆண்டுகளில் மாவட்ட அளவில் பரிந்துரைக்கப்படாதவர்கள் அமைச்சர்கள் பரிந்துரையில் விருதுகள் பெற்ற வரலாறும் உள்ளது.
மேலும் இதுவரை விருதுக்கு தேர்வு பெற்ற பின்னர் தான் போலீஸ் நற்சான்று கேட்கப்பட்டது. தேசிய நல்லாசிரியர் விருது தேர்வு முறையில் மத்திய கல்வித்துறையே ஆசிரியர்களின் நற்சான்றை போலீஸ் மூலம் பெற்று விடுகின்றன.எனவே 'நல்லாசிரியர் விருது' என்பது தகுதியுள்ள ஒவ்வொரு ஆசிரியர்களின் வாழ்நாள் கனவு. அது சோதனைகளும், சிக்கல்களும் நிறைந்ததாக இல்லாமல் முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.