நீட் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த இயலாது... ஒத்திவைக்கவும் முடியாது : தேசிய தேர்வு முகமை திட்டவட்டம்!
நீட் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த இயலாது என்றும் தேசிய தேர்வு முகமை உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
வழக்கின் பின்னணி
மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இந்திய மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுதுவதற்கான மையம் ஏற்படுத்த வேண்டும் அல்லது நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரி கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அப்துல் அசிஸ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதி எல். நாகேஸ்வரராவ் தலைமையிலான விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த மனுக்கள் மீதான முந்தைய விசாரணையில், ஆன்லைன் மூலம் ஏன் நீட் தேர்வை நடத்தக்கூடாது? என மருத்துவக் கவுன்சிலுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பியதுடன், மேலும் இந்த மனு தொடர்பாக பதிலளிக்க, மத்திய அரசு, இந்திய மருத்துவக் கவுன்சில், தேசிய தேர்வுகள் முகமை உள்ளிட்ட எதிர்மனுதாரர்களுக்கு உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.
தேசிய தேர்வு முகமை உச்சநீதிமன்றத்தில் பதில் மனு
இந்த நிலையில் நீட் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த இயலாது என்றும் தேசிய தேர்வு முகமை உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், நீட் தேர்வை ஆன்லைன் மூலம் கண்டிப்பாக நடத்த முடியாது. அவ்வாறு செய்யும் பட்சத்தில் அதிகப்படியான குளறுபடிகள் ஏற்படும். அதேப்போல் கூடுதல் மையங்களை உருவாக்குவது என்பதும் சாத்தியமில்லை என தெரிவித்துள்ளது. மேலும், தரவுகளின் அடிப்படையில் வளைகுடா நாடுகள் மற்றும் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட மற்ற பிற நாடுகளில் உள்ள மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.
ஆனால், ஒவ்வொரு நாடுகளிலும் தேர்வு மையங்களை அமைக்க முடியாது.மேலும், வந்தே பாரத் திட்டன் கீழ் போதிய விமானங்களை இயக்கப்பட்டு வருவதால் மாணவர்களின் கோரிக்கையை ஏற்க இயலாது. தேர்வுக்குத் தயாராக மாணவர்களுக்கு போதிய அவகாசம் கொடுத்து அறிவிப்புகள் வெளியிட்டுள்ளதால் தேர்வை ஒத்திவைக்க இயலாது.எனவே இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கு வரும் வாரம் விசாரணைக்கு வரும்போது செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா? அல்லது நடத்தப்படும் பட்சத்தில் எந்தெந்த வழிமுறைகள் பின்பற்றப்படும் என்பது குறித்த விளக்கங்களை தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யும் என தெரியவருகிறது