கொரோனா பாதிப்பு இருந்தால் ஜே.இ.இ., ஹால் டிக்கெட் கிடைக்காது
ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு இருப்போர், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியாத வகையில், நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
உயர் கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி.,க்களில் சேருவதற்கான ஒருங்கிணைந்த நுழைவு தேர்வான, ஜே.இ.இ., தேர்வு மற்றும் மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' தேர்வு, செப்டம்பரில் நடத்தப்படுகிறது.இந்த தேர்வுகளை தள்ளி வைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்குகளை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட், நேற்று மாலை வெளியிடப்பட்டது.ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யும் போது, காய்ச்சல், இருமல், தொண்டை வலி உள்ளிட்டவை உள்ளதா; 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டவரா; கொரோனா பாதிக்கப்பட்டவருடன் நெருக்கமாக இருந்தவரா என, தகவல் கேட்கப்படுகிறது.
இதில், கொரோனா தொற்று பாதிப்பு தெரிந்தால், அவர்கள் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய முடியாத வகையில், 'ஆன்லைன்' வசதி செய்யப்பட்டுள்ளது.ஹால் டிக்கெட்டுடன், ஒரு விண்ணப்ப படிவம் வழங்கப்படுகிறது. அதில், மாணவர்கள் கடைசி, 14 நாட்கள் வசித்த நகரம் மற்றும் நாடு குறித்த விபரங்களை பூர்த்தி செய்து தர வேண்டும் என்ற, நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
தேர்வு மையத்தில் முக கவசம் வழங்கப்படும். ஹால் டிக்கெட்டை தேர்வு மையத்தில் உள்ள பெட்டியில் போட வேண்டும். மாணவர்கள் தங்களுக்கான எழுது பொருட்களுடன், 50 மில்லி கிருமி நாசினி எடுத்து வர வேண்டும் என, நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன