தேர்வாகியும் பணி நியமனத்துக்காக காத்திருக்கும் கணினி பயிற்றுநர்கள்
பள்ளிக் கல்வித் துறையில் தகுதித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு 6 மாதங்களான நிலையிலும் பணி நியமனத்துக்காக காத்திருக்கின்றனர் 800 - க்கும் மேற்பட்ட கணினி பயிற்றுநர்கள். தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 824 கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந் தாண்டு ஜூன் மாதம் போட்டித் தேர்வு நடந்தது.
இதில் தேர்ச்சிப் பெற்று இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின்னர் , ஜன.11 ஆம் தேதி , தற்காலிக தேர்வாளர்கள் பட்டியல் வெளியானது. இதில் 697 பேர் மட்டுமே இடம் பெற்றனர். மீதியுள்ள 117 இடங்களுக்கான முடிவு , வழக்குகள் நிலுவையால் நீதிமன்ற உத்தரவுப்படி நிறுத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து அந்த வழக்குகள் முடியும்போது , நிறுத்திவைக்கப்பட்ட 117 ) இடங்களுக்கும் சேர்த்து , இறுதித் தேர்வர்கள் பட்டியல் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. ஆனால் வழக்குகள் குறித்து இது வரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போட்டித் தேர்வில் வெற்றி பெற்றும் , தற்காலிக பட்டியலில் இடம் பிடிக்க முடியாத திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் கூறியது : கணினி பயிற்றுநர் நியமனம் தொடர்பான வழக்குகளில் அரசு கவனம் செலுத்தாததால் இன்று வரை இறுதிப்பட்டியல் வெளியிடவில்லை. போட்டித்தேர்வில் தகுதி பெற்ற 824 பேருக்கான முழு பட்டியல் வெளியிடும் பட்சத்தில் மட்டுமே , அனைவருக்கும் நியாயமான முறையில் பணி கிடைக்கும். வழக்குகள் தாமதமாக முடிந்து , 117 இடங்கள் தனியாக நிரப்பப்பட்பால் தர வரிசையில் சிக்கல்களும் , இட ஒதுக்கீட்டில் பல்வேறு குழப்பங்களும் ஏற்படும். ஏற்கெனவே முதுகலை வேதியியல் ஆசிரியர் தேர்வில் இதுபோல இட ஒதுக்கீடு சிக்கல் எழுந்ததால் , அப்போது வெளியிடப்பட்ட தற்காலிக தேர்வுப் பட்டியலை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. எனவே , தமிழக அரசு காலிப்பணியிடங்களுக்காக தேர்வு செய்யப்பட்ட 824 பேருக்கும் மொத்தமாக , இறுதிப் பட்டியலை விரைந்து வெளியிட வேண்டும் என்றனர்