சீனாவின் பப்ஜி உட்பட 118 ஆப்களுக்கு அதிரடி தடை
சீனாவின் பப்ஜி மொபைல் கேம் உட்பட 118 ஆப்களுக்கு மத்திய அரசு அதிரடி தடை விதித்துள்ளது. கிழக்கு லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15ம் தேதி சீன ராணுவம் அத்துமீறி நுழைந்தது. இதனால் ஏற்பட்ட கைகலப்பில் இந்திய தரப்பில் 20 வீரர்களும், சீன தரப்பில் 35 பேரும் பலியாகினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, சீனாவை சேர்ந்த 106 மொபைல் ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்நிலையில், கடந்த 29, 30ம் தேதிகளில் லடாக்கின் பாங்காங்க் திசோ ஏரிப்பகுதியில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறியது. இதற்கும் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இதன் எதிரொலியாக, சீனாவை சேர்ந்த பப்ஜி உள்ளிட்ட 118 மொபைல் ஆப்களுக்கு மத்திய அரசு நேற்று அதிரடி தடை விதித்தது.
இதுதொடர்பாக மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், ‘இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பப்ஜி கேம் உள்ளிட்ட மொபைல் ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்கள் இந்தியாவுக்கு வெளியே உள்ள சர்வரில் இந்தியர்களின் தகவல்களை பரிமாறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. எனவே, கோடிக்கணக்கான இந்தியர்களின் நலன் கருதி இத்தடை விதிக்கப்பட்டுள்ளது,’ என கூறப்பட்டுள்ளது.பப்ஜி கேம் தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு பெற்றோர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. இந்த விளையாட்டை ஆடும் பல மாணவர்களும் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். சிலர் தற்கொலை செய்த சம்பவங்களும் நடந்துள்ளன.