
கோவை அரசு கலைக் கல்லூரியில் இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கு 28, 29-ம் தேதிகளில் இறுதிக்கட்டக் கலந்தாய்வு நடைபெறுகிறது.
கோவை அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், பாதுகாப்பியல், சுற்றுலாவியல், அரசியல் அறிவியல், பி.எஸ்சி. கணிதம், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், உளவியல், புவியியல், பி.காம்., பி.காம். சிஏ., பிபிஏ உள்ளிட்ட 24 இளநிலை பட்டப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இப்படிப்புகளின் முதலாம் ஆண்டில் காலியாக 1,433 இடங்கள் உள்ளன. 18 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். கடந்த ஆக.28-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை முதல்கட்டக் கலந்தாய்வும், செப்.7-ம் தேதி 2-ம் கட்டக் கலந்தாய்வும் நடைபெற்றது. இந்நிலையில் மீதமுள்ள இடங்களை நிரப்புவதற்கான இறுதிக்கட்டக் கலந்தாய்வு வரும் 28 மற்றும் 29-ம் தேதிகளில் நடைபெறுகிறது.
இதுகுறித்துக் கோவை அரசு கலைக் கல்லூரி முதல்வர் க.சித்ரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
''அரசு விதிமுறைகளின்படி, கல்லூரியில் இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 1,433 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், தமிழக உயர் கல்வித்துறை கூடுதலாக 20 சதவீத இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்துமாறு உத்தரவிட்டு அரசாணை (எண்.69) வெளியிட்டுள்ளது.
இதன்படி முதல் இரண்டு கட்டக் கலந்தாய்வில் நிரப்பியது போக, மீதமுள்ள சுமார் 200 இடங்களை நிரப்புவதற்கான இறுதிக்கட்டக் கலந்தாய்வு வரும் செப். 28 மற்றும் 29-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதுவரை விண்ணப்பித்து இடம் கிடைக்காதவர்கள் 28-ம் தேதி அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேரில் கலந்துகொள்ள வேண்டும். அதன் பின்னர் இடங்கள் இருப்பின், 29-ம் தேதி விண்ணப்பிக்கத் தவறியவர்களும், புதிதாக விண்ணப்பித்துப் பங்கேற்கலாம்.
இக்கலந்தாய்வில் பங்கேற்கும் அனைவருக்கும் இடம் கிடைக்கும் என்று உத்தரவாதம் கிடையாது. பிளஸ் 2 மதிப்பெண், இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படியே சேர்க்கை நடைபெறும். கலந்தாய்வுக்கு வரும் அனைவரும் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும் கோவிட்-19 வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும் நடந்துகொள்ள வேண்டும்''.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment