மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு; 50% இட ஒதுக்கீடு கோரும் மனு: அக்.13-க்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு :

மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு; 50% இட ஒதுக்கீடு கோரும் மனு: அக்.13-க்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு :

மருத்துவப் படிப்பில் அகில இந்தியத் தொகுப்புக்காக தமிழகம் ஒதுக்கும் இடங்களில் 50% இட ஒதுக்கீடு கோரும் தமிழக அரசின் மனு மீது மத்திய அரசு பதிலளிக்காததால் அக்.13-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மருத்துவப் படிப்புக்காக தமிழகத்தால் அகில இந்தியத் தொகுப்புக்கு ஒப்படைக்கப்படும் இடங்களில், தமிழக ஓபிசி பிரிவு மாணவர்களுக்கான 50% இட ஒதுக்கீட்டை நடப்புக் கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தக் கோரி தமிழக அரசு, அதிமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கில் எதிர்மனுதாரர்கள் தரப்பு பதில் மனுத்தாக்கல் செய்துவிட்டனரா? என நீதிபதிகள் கேட்டனர்.

அதற்குப் பதிலளித்த இந்திய மருத்துவக் கவுன்சில் தரப்பு, இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக முடிவெடுக்க மருத்துவக் கவுன்சிலுக்கு அதிகாரமில்லை. மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும். மேலும் மத்திய அரசு எடுக்கும் முடிவை முழுமையாக கடைப்பிடிப்போம் எனத் தெரிவித்தது.

அதேவேளையில், மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். இதனை ஏற்ற நீதிபதிகள் பதில் மனுத்தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு அவகாசம் வழங்கினர்.

அப்போது திமுக தரப்பு வழக்கறிஞர் பி.வில்சன், இட ஒதுக்கீட்டை இறுதி செய்ய அமைக்கப்பட்ட குழு கடந்த 22-ம் தேதி கூடியுள்ளது. அதேபோல இட ஒதுக்கீடு விவகாரத்தில் மாநில நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் பதில் அளித்தார் என்பதை நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.

அதேவேளையில், இந்த மனு மீது இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கிரி கோரினார். அதற்கு நீதிபதிகள், முதலில் மத்திய அரசு பதில் மனுத்தாக்கல் செய்யட்டும் எனத் தெரிவித்து, இந்த வழக்கு மீதான விசாரணையை அக்டோபர் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive