தமிழக அரசின் திறன் மேம்பாட்டுக் கழகம்- அமெரிக்க நிறுவனம் இணைந்து 50,000 இளைஞர்களுக்குப் பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழ்நாட்டில் 50,000 வேலையற்ற நபர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும், அமெரிக்காவின் கோர்ஸெரா நிறுவனமும் இணைந்து இணைய வழியில் இலவசமாக கல்வி மற்றும் பயிற்சி அளிக்கிறது. இதற்காக விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், மாநிலத்தின் திறன் பயிற்சிகளுக்கான ஒருங்கிணைப்பு முகமையாகச் செயல்படுவதுடன் தொழில் நிறுவனங்கள், தொழில் நிறுவனக் கூட்டமைப்புகள், பயிற்சி நிறுவனங்கள், துறை திறன் குழுமங்கள், மதிப்பீடு செய்யும் நிறுவனங்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் அமைப்புகள் ஆகிய திறன் தொடர்புடைய அனைவரையும் ஒருங்கிணைக்கிறது.
தற்போது திறன் மேம்பாட்டுக் கழகம் 50,000 வேலையற்ற இளைஞர்களுக்குப் பல்வேறு துறைகளில் பயிற்சி அளிக்க கலிபோர்னியாவில் இயங்கும் புகழ்பெற்ற கோர்ஸெரா நிறுவனத்துடன் இணைந்துள்ளது. இதற்கான பயிற்சி வகுப்பில் இளைஞர்கள் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன், தி ராம்கோ சிமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனம், கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்புப் பிரிவில் உயர்தர திறன் மேம்பாட்டு மையம் நிறுவிடவும், கோர்ஸெரா நிறுவனம், தமிழ்நாட்டில் 50,000 வேலையற்ற நபர்களுக்கு இணைய வழியில் இலவசமாக கல்வி மற்றும் பயிற்சி அளித்திடவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
கலிபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கோர்ஸெரா (Coursera) நிறுவனம் உலகத்தரம் வாய்ந்த முன்னணி இணையவழிக் கற்றல் தளமாகும். 3900 சிறப்புப் பயிற்சி வகுப்புகள், 13 புரொஃபஷனல் வகுப்புகள், 20க்கும் மேற்பட்ட பட்டம், பட்டமேற்படிப்பு வகுப்புகளை நடத்துகிறது.
இந்நிறுவனம், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், கூகுள், ஐபிஎம் போன்ற நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுடன் சேர்ந்து இணைய வழியில் பொறியியல், இயந்திரக் கற்றல், கணிதம், வணிகம், கணினி அறிவியல், டிஜிட்டல் சந்தைப்படுத்தல், மருத்துவம், உயிரியல், சமூக அறிவியல் மற்றும் பிற பாடங்களில் சான்றிதழ் மற்றும் பட்டப் படிப்புகளை வழங்கி வருகிறது. மேலும், இந்நிறுவனம் உலகெங்கிலும் உள்ள 80 நாடுகளில் திறன்களை வளர்க்கும் நோக்கில் பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் 50,000 வேலையற்ற நபர்களுக்கு இணைய வழியில் இலவசமாக கல்வி மற்றும் பயிற்சி அளித்திடும் வகையில், முதல்வர் முன்னிலையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கும், கோர்ஸெரா நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம், வேலையற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் இந்நிறுவனம் வழங்கும் இணையவழி பயிற்சி வகுப்புகளால் வேலைவாய்ப்பு பெற வழிவகை ஏற்படும்.
தற்போது தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், கோர்ஸெரா இணைந்து அளிக்கும் பயிற்சியில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சேர விரும்புவோர் கீழே உள்ள இணைப்பைத் திறந்து அதில் தங்கள் விவரங்களைப் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். முதலில் பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை என்பதால் விரைவாக விண்ணப்பித்தால் பயிற்சியில் சேரலாம்.
0 Comments:
Post a Comment