"ஆன்லைன் வகுப்புகளுக்கு கல்விக் கட்டணம் வசூலிக்கக்கூடாது" - பள்ளிக்கல்வித் துறை கடும் எச்சரிக்கை :

ஆன்லைன் வகுப்புகளுக்கு கல்விக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என தமிழக பள்ளிக் கல்வித்துறை கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் கடந்த சில மாதங்களாகவே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக மாணவர்கள் பள்ளிக்கு செல்லாத காரணத்தால் அவர்களது கல்வியில் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக பல பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகங்கள் ஆன்லைன் வகுப்புகளை நடத்திவருகின்றன.
எனினும் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க கிராமப்புற மாணவர்களுக்கும் ஏழை மாணவர்களுக்கும் சிரமமாக இருப்பதால் ஆன்லைன் வகுப்புகள் நடத்தக்கூடாது என்ற எதிர்ப்பும் பதிவுசெய்யப்பட்டுவருகின்றன. ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பதால் மாணவர்களுக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்படுவதாகவும் சில பெற்றோர்கள் குற்றம்சாட்டிவந்தனர். இதனை அடுத்து, தமிழகத்தில் செப்டம்பர் 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை ஆன்லைன் வகுப்புகள் வைக்கக்கூடாது என தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.

இது ஒரு புறம் இருக்க, ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணம் செலுத்தக்கூறி சில தனியார் பள்ளிகள் மாணவர்களை கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால், இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறை, "ஆன்லைன் வகுப்புகளுக்கு எந்த பள்ளியும் கட்டணம் வசூலிக்கக்கூடாது. அதே போல, ஆன்லைன் வகுப்புகளுக்கு தேர்வுகளும் நடத்தக்கூடாது. விலக்கு அளிக்கப்பட்டுள்ள 5 நாட்களில் எக்காரணத்தைக் கொண்டும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படக்கூடாது. இதுதொடர்பாக புகார் கிடைத்தால் சம்பந்தப்பட்ட பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment