அரசு பள்ளியில் ஆன்லைன் வகுப்பு பரிதாபங்கள்!
ஜூன் மாதம் 8 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இயற்பியல் பாடத்தை ஆன்லைனில் ஆரம்பித்தேன். வகுப்பில் 65 மாணவர்கள் இருக்கிறார்கள். 10 மாணவர்கள் ஆரம்பத்தில் இணைந்து கொண்டனர். கூகிள் மீட் ல் வகுப்புக்களை நடத்தி, கூகிள் கிளாஸ்ரூமில் குறிப்புக்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்வதோடு கூகிள் கிளாஸ்ரூமில் தேர்வுகள் நடத்திக்கொண்டிருக்கிறேன்.
மூன்று மாதங்கள் கடந்த நிலையில் தற்போது சுமார் முப்பது மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். (30/65 = 0.461) 46% மாணவர்கள் மட்டுமே தினமும் கலந்து கொள்கின்றனர். ஆன்லைன் வகுப்புக்கு வரும் மாணவர்களிடம் நிறைய நேர்மறை மாற்றங்களை கவனிக்கிறேன். அனைத்து மாணவர்களிடமும் அரசு கொடுத்த கணினி இருக்கிறது. பெரும்பாலான மாணவர்களிடம் (90% க்கும் மேல்) மொபைல் இருக்கிறது. கிராமத்திலிருந்தாலும், தினக்கூலிக்கு கூட வழியில்லாமல் இருந்தாலும் தன் மகனின் படிப்புக்காக எதை வேண்டுமானாலும் தியாகம் செய்ய தயாராக இருக்கும் ஒரு சமூகமே சாயல்குடியில் இருக்கிறது.
தனியார் பள்ளிகளில் வாட்சப்பில் ஒரு வீடியோ மட்டும் அனுப்பிவிட்டு அந்த பாடத்தை படித்து எழுதுங்கள் என்று கூறும் பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் தவறாமல் பங்கெடுக்கும் நிலையில் (விதிவிலக்கு எங்கும் உண்டு) ஒரு அரசு பள்ளியில் பள்ளி வகுப்பறைக்கும் ஆன்லைன் வகுப்பறைக்கும் எந்த வித வித்தியாசமும் இல்லாமல் மாணவர்களை கூட்டிச் செல்லும் ஒரு அரசுப்பள்ளியில் ஏன் அனைத்து மாணவர்கள் கலந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் என்ற கேள்வி என் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
தனியார் பள்ளிகளை பொறுத்த வரையில் மே மாதம் முதல் ஆன்லைன் வகுப்புக்களை தொடங்கிவிட்டார்கள். கிராமப்புறங்களில் இருக்கும் பள்ளிகளில் ஜுன் ஆரம்பித்து விட்டார்கள். ஒரு வாட்சப் குரூப். சில வீடியோக்கள் என வகுப்புக்கள் தொடங்கப்பட்டன. ஆன்லைன் வகுப்பு நடத்துவதற்குரிய கருவிகளைப் பற்றி தெரியாவிட்டாலும் வாட்சப் ஏற்கனவே பழகிய ஒன்றாக இருந்ததால் அதில் வீடியோ மற்றும் ஆடியோக்களை பகிர்ந்து கொள்வதில் அவர்களுக்கு சிரமமாக இல்லை. தனியார் பள்ளி நிர்வாகம் கொடுக்கும் அழுத்தம் காரணமாக தன்னை ஒரு முறை செல்பி கூட எடுக்காத ஆசிரியர் கூட வீட்டில் பாடம் நடத்தி அதை வீடியோவாக பதிவு செய்து வாட்சப்பில் அனுப்பத் தொடங்கினர்.
இன்னும் அதிகமாக கல்விக்கட்டணம் வாங்கும் பள்ளிகளில் பள்ளிக்கென தனி வெப்சைட்டுகளை உருவாக்கி பல ஆன்லை வகுப்பறை கருவிகளை பயன்படுத்தி ஆன்லைன் பாடம் நடத்த ஆரம்பித்தனர். கல்விக்கட்டனம் கட்டாத மாணவர்களை வாட்சப் வகுப்பறையிலிருந்து அல்லது லாகின் ஐடி கொடுக்காமல் நீக்கிவிடுகின்றனர். அரசு 40% கல்விக்கட்டணம் வசூலிக்க சொல்கிறது. கட்டாயப்படுத்தக்கூடாது என்று சொல்கிறது. ஆனால் இரண்டையும் பெரும்பாலான பள்ளிகள் கடைபிடிப்பதில்லை. படிப்பதற்கு ஆர்வமில்லாமல் இருக்கும் மாணவர்கள் கல்விக்கட்டணம் கட்டாததால் ஆன்லைன் வகுப்பறையை விட்டு வெளியேற்றமடையும் போது அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். ஆனால் அவர்கள் பெற்றோர்கள் வருத்தப்படுகிறார்கள். எதையாவது விற்று அல்லது கடனை வாங்கியாவது தன்னுடைய மகனை ஆன்லைன் வகுப்பறையில் சேர்க்க முயற்சி செய்கிறார்கள். ஆகவே தனியார் பள்ளிகளில் பள்ளி நிர்வாகத்திற்கும் பள்ளிக் குழந்தைகளுக்குமிடையே ஒருவிதமான கவர்ச்சி விசையே செயல்படுகிறது.
குழந்தைகள் வகுப்பில் சேர விரும்பாவிட்டாலும் பெற்றோர்களின் அழுத்தம் பள்ளிக்கும் குழந்தைகளுக்கும் இடைவெளியை குறைக்கிறது. தினந்தோறும் வகுப்பறைக்கு வருகிறார்கள். புரிந்தோ / புரியாமலோ கற்றுக்கொள்கிறார்கள். பார்த்தோ/ பார்க்காமலோ தேர்வும் எழுதுகிறார்கள். அதிலும் பெரும்பாலும் தேர்வுகள் ஒரு மதிப்பெண் தேர்வுகளாகவே இருக்கின்றன.
அரசுப் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புக்கள் நடுத்துவதற்கு இதுவரை முறையான அறிவுப்பு எதுவும் இல்லை. அரசு தொலைக்காட்சியில் பாடங்கள் ஒளிபரப்ப்படுகின்றன. சிறு வகுப்புகளுக்கு தயாரித்த வீடியோக்கள் அருமையாக இருக்கின்றன. புத்தகத்தை கையில் வைத்து தொலைக்காட்சியைப் பார்த்தால் புரிந்து கொள்வார்கள். தொடர்ச்சியாக புத்தகத்தை வைத்துக் கொண்டு தொலைக்காட்சியைப் பார்க்கும் குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் எத்தனை குழந்தைகள் தொலைக்காட்சியைப் பார்த்து கற்றுக்கொள்கிறார்கள்? சீரியல், திரைப்படங்கள், மலிவான நகைச்சுவை சானல்களுக்கு நடுவே கல்வித் தொலைக்காட்சி காணாமல் போகிறது என்பது தான் உண்மை. பதிவேட்டின் படி அதிக சதவீத மக்கள் கல்வித் தொலைக்காட்சியால் பயனடைந்திருக்கலாம் என்று கூறினாலும் நிஜம் நிச்சயம் வேறாகத் தான் இருக்கும். நான் இப்போது கூறியது சிறு வகுப்பு குழந்தைகளுக்குரிய வீடியோக்கள்.
10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தொலைக்காட்சி ஒளிபரப்பு நடைபெறுகிறது. 12 வகுப்பு மாணவர்களுக்கு அதனை அந்த அரசு கொடுத்த மடிக்கணினியில் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. கணிதப் பாடத்தை நடத்தும் ஆசிரியர்கள் கரும்பலகையில் எழுதி நடத்துவது போல படப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதைப்பயன்படுத்தி மாணவர்கள் கற்றுக்கொள்ளலாம். ஆர்வமுள்ள மாணவர்களுக்கு அது நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இயற்பியல் பாடத்தில் மூன்று வாரம் (21 மணிநேரம்) நடத்தப்பட வேண்டிய பாடங்கள் அரை மணி நேர வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் புத்தகத்தை அப்படியே ஸ்கேன் செய்து காட்சியாக காட்டுகிறார்கள்.
இயற்பியல் பெரும்பாலும் கணிதபயன்பாடாக இருக்கும். சரியான விளக்கமில்லாமல் அனைவரையும் புரியவைப்பது கடினம். அனைத்து வீடியோக்களும் புரிய வைக்கும் வீடியோக்களாக இல்லாமல் பாடங்களை வேகமாக புரட்டிப்பார்க்கும் வீடியோக்களாகவே இருக்கிறது.
சென்ற மாத இறுதியில் பள்ளியில் சேர்க்கைகளை தொடங்கலாம் என்ற ஒரு அறிவிப்பைத் தவிர வேறு எந்த வழிகாட்டுதல்களையும் அரசு கொடுக்கவில்லை. அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஏராளமான ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புக்களை பல்வேறு வழிகளில் நடத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் அரசிடமிருந்து ஆன்லைன் வகுப்பு பற்றி எந்த அறிவிப்பும் இல்லாததால் மாணவர்கள் தற்போதய காலகட்டத்தை விடுமுறையாகவே கருதுகின்றனர். விடுமுறைகளில் மாணவர்களை பள்ளிக்கு வரச்சொல்லும் போது ஏற்படும் சலிப்பு இப்போது அவர்களுக்கு இருக்கிறது. ஒரு புறம் அரசு ஒதுங்கிக்கொள்ள மறுபுறம் பெற்றோர்கள் ஒதுங்கிக்கொள்கிறார்கள்.
தனியார் பள்ளியில் பெற்றோரும் பள்ளி நிர்வாகமும் ஆன்லைன் வகுப்பை நோக்கிச் செல்ல அழுத்தம் கொடுக்கிறார்கள். அதனால் அங்கு ஒரு கவர்ச்சி விசை செயல்படுகிறது. அரசுப் பள்ளிகளில் அரசும் பெற்றோர்களும் ஆன்லைன் வகுப்பை விட்டு விலகிச் செல்லுகிறார்கள். பெற்றோர்கள் ஒருபுறம் செல்ல அரசு மறுபுற திசையில் செல்கிறது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கும் இடையே ஒரு விலக்கு விசையே இருக்கிறது. இதனால் தனியார் பள்ளிகளை விட சிறப்பாக ஆன்லைன் வகுப்பை சிறப்பாக நடத்தினாலும் கலந்துகொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது.
ஆன்லைனில் மாணவர்கள் கற்கும் போது சில நன்மைகளும் ஏற்படுகிறது.
மாணவர்களின் கவனிக்கும் திறன் அதிகரிக்கிறது. வகுப்பறையில் குழுவாக இருக்கும் போது அங்கும் இங்கும் கவனம் சிதறிப்போகும். ஆனால் இப்போது ஒரு மணிநேரம் முழுவதுமாக புத்தகம் + மொபைல் கவனித்துக் கொண்டிருக்கும் போது அவர்கள் கவனம் சிதறாமல் இருக்கிறது. பாடம் நடத்தும் போது இடையிடையே நான் கேள்வி கேட்கும் போது இதை உணர்ந்திருக்கிறேன்.
இரண்டாவதாக வகுப்பில் தெரியாத விஷயங்களையும்/ புரியாத பாடங்களையும் கேளுங்கள் என்று கேட்கும் போது பதிலே வராது. ஆனால் ஆன்லைன் வகுப்புக்களில் புரியவில்லை என்றால் உடனே கேட்கிறார்கள். தூரத்தில் இருப்பதனால் தைரியமாக கேட்கிறார்கள் என்றும் இதை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் தெளிவாக கவனித்தால் தான் கேட்பதற்கு கேள்விகள் மனதில் தோன்றும். எனவே நன்றாக கவனிக்கிறார்கள் என்றும் இதனை பொருள்கொள்ளலாம்.
சுயமாக கற்றல் , தேடல் போன்றவைகள் அதிகரித்திருக்கிறது.
தேர்வு நடத்துவது மற்றும் அதற்கு நேர்மையாக பதிலளிப்பது போன்றவைகள் சற்று சிரமம் தான், ஆனாலும் சில மாணவர்களிடம் அந்த நேர்வை வளர்ந்திருக்கிறது என்று தான் கூறவேண்டும்.
இவையெல்லாம் தினமும் வகுப்புக்கு வரும் 46 % மாணவர்களுக்குத் தான் பொருந்தும். இவர்கள் பள்ளிக்கு வராவிட்டாலும் கற்றுக்கொள்வர். ஆசிரிய இல்லாவிட்டாலும் கற்றுக்கொள்வர். ஆனால் ஆன்லைன் வகுப்புக்கு வராத மாணவர்களை பற்றித் தான் நான் கவலைப்படுகிறேன். முக்கியமாக ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள வாய்ப்பிருந்தும் கலந்துகொள்ளாமல் தவிர்க்கும் மாணவர்களைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறேன். சில மாணவர்கள் என்னுடைய வகுப்பில் வேறு பெயரில் வருவார்கள். இடையிடையே கேல்வி கேட்கும் போது அவர்களின் பெயரை (மறைந்திருக்கும் பெயரை) கூப்பிடும் போது திடீரென வெளியேறி விடுவார்கள்.
அரசு முறையாக ஆன்லைன் வகுப்பை அரசுப் பள்ளியிலும் நடத்த தக்க அறிவுரைகளை கூறவேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் இண்டெர்னெட் வசதி கிடைப்பது சிரமம் தான். ஆனால் கிடைக்கின்ற மாணவர்களுக்காவது ஆன்லைன் வகுப்புக்களை நடத்த அறிவுறுத்தலாம். இண்டெர்னெட் வசதி கிடைக்காத அல்லது இல்லாத மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலம் சில செயல்பாடுகளையும் பயிற்சிகளையும் கொடுத்து வாரம் தோறும் பள்ளிகளில் ஒப்படைக்க வலியுறுத்தலாம். இப்பொழுது இதையெல்லாம் செய்யாமல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்துகிறேன், கணினியில் வீடியோக்களை பதிவு செய்து கொடுத்துவிட்டேன். அவர்களாக படித்துக்கொள்வார்கள் என்கிறார்கள். இப்பொழுது நீட் தேர்வு நடத்தியது போல பள்ளி இறுதி தேர்வையும் நடத்துவார்கள். பாதிக்கப்படுபவர்கள் என்னவோ மாணவர்கள் தான்.
ஆகவே அரசு ஆன்லைன் வகுப்புக்களை நடத்துவதற்கு சரியான வழிகாட்டல்களை ஏற்படுத்த இனியும் காலம் தாழ்த்தாமல் இருப்பது நல்லது.
பின்குறிப்பு : நான் ஆன்லைன் வகுப்புக்கு எதிரானவன் தான். மாணவர்கள் தாமாகவே கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவன் தான். ஆனால் சூழலுக்கு ஏற்ப நாமும் மாறவில்லை என்றால் பாதிக்கப்படுவதும் நாம் தான்.
- Mr. Bergin