மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் இருந்த நிலையில், தமிழகத்தில் எப்போது மருத்துவக் கலந்தாய்வு தொடங்கும் என்று கேள்விகள் இருந்துவருகின்றன. மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தருவதற்கு தமிழக ஆளுநர் காலதாமதம் செய்ததால் தமிழக அரசு கலந்தாய்வு பணியைத் தொடங்க முடியாமல் இருந்துவந்தது. மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் மருத்துவக் கலந்தாய்வு தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கலந்தாய்வு நடைபெறுவதற்கு முன்பாக மாணவர்களுக்காக வெளியிடப்படும் prospectus வரும் திங்கட்கிழமை வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அடுத்த ஒரு வாரத்துக்குள் மாணவர்கள் விண்ணப்பிக்க அவகாசம் கொடுத்து தர வரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.
அகில இந்திய மருத்துவ கலந்தாய்வின் முதல் சுற்று 28ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாவது சுற்று 18ம் தேதி தொடங்குகிறது. அதற்குள்ளாக தமிழக மருத்துவக் கலந்தாய்வு தொடங்கும். பொதுவாகவே அகில இந்திய கலந்தாய்வு முதல் சுற்று இரண்டாம் சுற்று தொடங்கும் முன் தமிழக மருத்துவக் கலந்தாய்வு தொடங்கும். இந்த ஆண்டும் அதே போல் நடைபெறும் என சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசு எடுத்திருக்கும் முடிவு குறித்து நீதிமன்றத்தில் திங்கட்கிழமை தெரிவித்த பிறகு சட்டச் சிக்கல்களும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment